districts

img

பெஞ்சால் புயல்-கனமழையால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 50,314 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிப்பு

கள்ளக்குறிச்சி,டிச.5- பெஞ்சால் புயல்-கனமழையால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 50,314 ஹெக்டேர் பரப்பளவு விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் மூலம் பயிர் சேத விவ ரங்கள் கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சித்தலூர் கிராமத்தில் சேதமடைந்துள்ள பருத்தி மற்றும் உளுந்து வயல், முடியனூர் கிராமத்தில் மரவள்ளிக்கிழங்கு வயல், பாசர் கிராமத்தில் உளுந்து, ஒகையூர் கிராமத்தில் மக்காச்சோள வயலினை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நில அளவை -நிலவரி திட்ட இயக்குநர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் நேரில் பார்வையிட்டு சேத  விவரங்கள், பாதிப்புகள் குறித்து கேட்ட றிந்தனர். சேத பாதிப்பு கணக்கெடுப்பு மற்றும் நிவாரண உதவிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோ சனை நடத்தினர். பிறகு, மதுசூதனன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிசம்பர் 3 நிலவரப்படி பயிரிடப்பட்டுள்ள நெல், சிறுதானிய வகைகள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் கரும்பு ஆகிய பயிர்கள் 1,08,856 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டதில் 50,314 ஹெக்டேர் பரப்பளவு விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக  கணக்கிடப் பட்டுள்ளது.

இவற்றில் 33 விழுக்காட்டுக்கு மேல்,  35,532 ஹெக்டேர் பரப்பளவு விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்கள் கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் கணக்கெடுக்கும் பணிகள் முழுமை யாக முடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை யால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.