கடலூர், ஜன. 28- கடலூர் மாவட்டத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: கடலூர் வட்டம் வண்டிக்குப்பம் சமத்துவபுரம் அருகி லிருந்த அரசு கட்டிடம் இடிந்து விழுந்து வண்டிக்குப்பம் எஸ்.புதூரை சேர்ந்த வீரசேகர் (17), சதீஷ்குமார் (17) ஆகிய இரண்டு மாணவர்கள் வியாழனன்று (ஜன. 27) பரிதாப மாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் மிகவும் மன வேதனையை உருவாக்கியுள்ளது. இந்த சம்பத்தில் மாணவர் ஒருவர் படுகாயத்துடன் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்த நிகழ்வு மாவட்ட மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இனிமேலும் மாவட்டத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறை அதிகாரிகளும் விரைந்து செயல்பட்டு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்க ளுக்கு அரசு சார்பில் தலா ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது வரவேற்கக்கூடியது. ஆனால் இது போதுமானதல்ல. இரு மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதேபோல், மாவட்டம் முழுவதும் பயன்பாடின்றி உள்ள அரசு தொகுப்பு வீடுகள், அரசு கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்களை கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிகைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.