கடலூர், மே 16- நெய்வேலியில் நிலம் கொடுத்த மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பை துண்டித்த என்எல்சி நிறுவனத்தின் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெய்வேலி என்.எல்.சி.க்கு நிலம், வீடு கொடுத்தவர்கள் மந்தராகுப்பம் பகுதியில் அய்யனார் காலனி, சிவாஜி நகர், ஐஐடி நகர், திருவள்ளுவர் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும், இப்பகுதி மக்களின் வீடுகளில் திடீரென மின்சார இணைப்பை என்எல்சி நிறுவனம் துண்டித்துள்ளது. என்எல்சி நிறுவனத்தின் இந்த செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வன்மையாக கண்டித்து மே 27 அன்று கம்மாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.