கடலூர், டிச.9- பெஞ்சால் புயல்வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் கடனை கட்டச்சொல்லி நுண்நிதி நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று மாதர்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா தலைமையில் மாநிலப் பொருளாளர் ஜி.பிரமிளா மாநில செயற்குழு உறுப்பினர் வி.மேரி மாவட்ட நிர்வாகிகள் பி.தேன்மொழி, வி.மல்லிகா,பி.மாதவி, எஸ்.ரேவதி உள்ளிட்ட மாவட்டக் குழு உறுப்பினர்கள் கொண்ட குழு பெஞ்சால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி களையும் பார்வையிட்டதோடு பொதுமக்களையும் சந்தித்துப் பேசினர். தென்பெண்ணை ஆற்றின் கரை உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்து வீடுகளை அழித்து பெண்கள், குழந்தைகள் மாற்று உடை கூட இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் ஐடிஎப்சி போன்ற மைக்ரோ பைனான்ஸ் நிறு வனங்கள், கடனை செலுத்தச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் என்கிற தகவலை அறிந்தோம். பெண்கள் இயல்பு நிலைக்கு திரும்பா மல் கடும் சிரமத்தில் உள்ள நிலை யில் கடனை செலுத்த சொல்லி வற்புறுத்துவது அவர்களை மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது. ஆகவே அடுத்த மூன்று மாத காலத்திற்கு (டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி) மைக்ரோ பைனான்ஸ் நிறு வனங்கள் கடனை வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும், அந்த தொகையை வட்டியில்லாமல் 3மாதம் முடிந்து வசூல் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் குடும்பத்திற்கு தேவை யான மளிகை பொருட்கள், பெண்க ளுக்கு நாப்கின் போன்ற அத்தியா வசிய பொருட்களை பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும்,
சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.10 ஆயிரம் என்பதை ரூ.25 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். இத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். கால்நடைகளின் உயிரி ழப்பிற்கு நிவாரணமாக ரூ.37,500 என்பதை 50ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
வெள்ளாடு, செம்மறி ஆடு உயி ரிழப்பிற்கு நிவாரணமாக ரூ.4ஆயிரம் என்பதை ரூ.8ஆயிரமாகவும், கோழி உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ.100 என்பதை ரூ.500 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ள தொகை ரூ.2ஆயிரம் என்பதை ரூ.5ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடலூர் நத்தப்பட்டு முதல் தாழங்குடா வரை தென்பெண்ணை அருகில் கான்கிரீட் சுவர் அமைக்க தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவக்க வேண்டும் எனவும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறம். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.