கடலூர், பிப். 25- அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளி யன்று (பிப். 25) நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கோ.மாதவன் பேசுகையில், “தமிழக அரசின் வேளாண் பட்b ஜட்டில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன் ரூ.4,000 விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளை பாதிக்கும் வருவாய் பங்கீட்டு முறையை திரும்பப் பெற வேண்டும், மாநில அரசின் பரிந்துரை விலையை (எஸ்ஏபி) மீண்டும் அமலாக்குவதுடன், அம்பிகா, ஆரூரான் ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை பெற்று தர வேண்டும், விவசாயிகளின் பேரில் பெற்றுள்ள வங்கி கடன்களை பைசல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க வேண்டும், திருமுட்டம் நெல் கொள்முதல் நிலையத்தில் பணம் தர மறுத்த விவசாயி பாண்டுரங்கன் வண்டியை மறித்து சாவியை பறித்தவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கடலூர்-சிதம்பரம் சாலை விரிவாக்கப் பணிக்காக பெருமாள் ஏரியின் கரைகளில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் மண் எடுத்து செல்லப்படுவதை தடுக்க வேண்டும்,
பெருமாள் ஏரியை நெய்வேலி சமூக மேம்பாட்டு நிதியை பெற்று தூர்வார வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்தற்கு கோரிக்கைவிடுத்தார். மூடப்பட்ட அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், எம்ஆர்கே சர்க்கரை ஆலையில் எத்தனால் பிளாண்ட் மின் உற்பத்தி மையம் தொடங்க வேண்டும். இஐடி பாரி சர்க்கரை ஆலையில் கழிவு என்ற பெயரால் விவசாயிகளிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாதவன் வலியுறுத்தினார். மேலும் காடாம்புலியூர் வேளாண்மை கூட்டுறவு வங்கி முறைகேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பாப்புலியூர் கால்நடை மருத்துவமனை மீண்டும் திருப்பாப்புலியூர் பகுதியில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.கே.சரவணன், துணைத் தலைவர் கற்பனை செல்வம், பண்ருட்டி வடக்கு தேவநாதன், திருமுட்டம் பாண்டுரங்கன், புவனகிரி காளி.கோவிந்தராசன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகளும், வேளாண் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.