கடலூர், நவ. 21- கட்டுக்கரை பகுதி இருளர் இன மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என விவசாயத் தொழிலாளர் சங்கம் (வி.தொ.ச) வலியுறுத்துள்ளது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ், மாவட்டப் பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் இருளர் இன மக்களுடன் சென்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், சேத்தியாத்தோப்பு கட்டுகரை பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிகின்றன. இவர்களுக்கு தொழில் வயல்களில் எலி பிடிப்பது, பாம்பு பிடிப்பது, கரும்பு வெட்டுவது, மூட்டை தூக்குவது என பல்வேறு கூலி வேலைகள் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களின் முகவரியில், குடும்ப அட்டை, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளன. அவர்களின் பிள்ளைகள் இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயில்கின்றர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வருவாய்த் துறையினர் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என்றும் இதற்கு மாற்றாக சிதம்பரம் அருகே கடற்கரை பகுதியில் இடம் தருவதாக தெரிவித்தனர். அந்த மக்களுக்கு மாற்று இடம். சேத்தியாத்தோப்பு சுற்று வட்டார பகுதிகளில் கொடுக்க வேண்டும். கடற்கரை பகுதியில் கொடுத்தால் வாழ்வாதாரம் முடங்கிவிடும். பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படும். எனவே மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து வாழ்வாதாரம் பாதிக்காத வாறு சேத்தியாத்தோப்பு சுற்று வட்டார பகுதிகளில் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.