ஓசூர்,நவ.28-
நிலவில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க வேண்டும் என்று மயில் சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
ஓசூர் அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் ‘கையருகே நிலா’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தி னராக அறிவியல் அறிஞர் முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணா துரை கலந்து கொண்டார்.
இந்த விழாவில் ‘சிறகைவிரி சிகரம் தொடு’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதேபோல் அறிவியல் ஆர்வம் கொண்ட பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு விஞ்ஞானம் சார்ந்த பொருட்களை காட்சிப்படுத்தி இருந்தனர். இதில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் என ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவை தொடர்ந்து செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறியதாவது:-
பூமியிலிருந்து 400 கி.மீ தூரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் விரைவில் முடிவடைகிறது. அதனால் புதிதாக அமைக்க வேண்டிய சர்வதேச விண்வெளி மையத்தை நிலவில் ஆரம்பிப்போம் என நான் பல இடங்களில் கூறி வருகிறேன்.
உலக நாடுகள் அனைத்தும் இணைந்து நிலவில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க வேண்டும். இதன் மூலம் நிலவுக்கு விரைவாகவும் சிக்கனமாக போக முடியும். அனைத்து நாடுகளும் இணைந்து இதை செய்தால் சண்டை இல்லாத உலகத்தை உருவாக்க முடியும். பூமிக்கு தேவையான எரிபொருட்களை அங்கிருந்து சிக்கனமாக கொண்டு வர முடியும்.
பூமியை துல்லியமாக அறிவதற்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து மேற்கொள்ளக்கூடிய ஒரு மிகப்பெரிய திட்டம் நிசார் ஆகும். நாசா -இஸ்ரோ சிந்தடிக் அப்பர்ச்சர் ரேடார் என்று சொல்லக்கூடிய அதன் கடைசி பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. இதன் மூலம் பூமியில் இயற்கை வளங்களை பார்ப்பது மட்டுமல்லாமல் சுற்றுப்புற சூழ்நிலைகள் துல்லியமாக பார்ப்பதற்கான வாய்ப்பை இந்த கலன் உருவாக்கும் என எதிர்பார்க்கிறோம்.
சந்திரயான் 3 பிரக்யான் ரோவர் உயிர்ப் பித்தாலும் விக்ரம் லேண்டர் வழியாகத்தான் செய்தி பரிமாற்றத்தை கொடுக்க முடியும். பூமிக்கு இன்னும் புதிதாக செய்திகள் வரும் என்ற நம்பிக்கை இனிமேல் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை, அண்டத்தில் பூமியை போன்று பல கிரகங்கள் உள்ளன. அங்கு உயிர்கள் உள்ளதா என ஆராய்ச்சியில் ஈடு பட்டால் சந்திரயான் 3ல் அனுப்பி உள்ள கலனில் இருந்து பூமியை நோக்கி அனுப்பும் சமிக்கைகள் மூலம் ஆராய்ச்சி செய்ய முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.