ஈரோடு, டிச.22 - சமூக நீதியின் அடையாளமாக விளங்கும் அம்பேத்கரின் நினைவை புதைக்கும் செயல்களில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர் என ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிவதாசன் எம்.பி., குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்ணல் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சனிக்கிழமை மாலை ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சுந்தரராஜன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினர் சிவதாசன் பேசுகையில், “அமித்ஷாவும், மோடியும், ஒன்றிய அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் சக்திகள், அம்பேத்கரின் நினைவைப் புதைக்க முயற்சிக்கின்றனர்.
அதனால்தான் நாடாளுமன்ற வளாகத்தின் முன்பிருந்த அம்பேத்கரின் சிலையை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர். அம்பேத்கரின் நினைவை அவர்கள் புதைக்க முயல்வது இந்திய ஜனநாயக சக்திகளாகிய எங்களுக்குத் தெரியும். அம்பேத்கர் மதச்சார்பின்மையின், சமூக நீதியின் அடையாளம். அமித்ஷா மற்றும் நரேந்திர மோடியின் கொள்கைக்கு எதிராக ஜனநாயக சக்திகளாகிய நாங்கள் போராடுவோம். நாடாளுமன்றத்தில் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்.
தேசத்தின் தலைவரான அம்பேத்கருக்கு எதிராக மிகவும் அவமானகரமான வார்த்தைகளை அமித்ஷா பயன்படுத்தியுள்ளார். இந்தியாவில் இருந்த அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, ஒன்றிய அரசின் கொள்கைக்கு எதிராக போராடின. ஆனால், அம்பேத்கர் அவமதிக்கப்பட்ட பிறகு, பாஜக கூட்டாளியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மட்டுமின்றி பெரும்பாலான அரசியல் கட்சியினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அம்பேத்கரை அவமதித்ததற்கும், அவர்களின் பாசிச கொள்கைக்கு எதிராகவும் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்” என்றார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர் வீ.அமிர்தலிங்கம், மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், ஜி.பழனிசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.