districts

img

மதசார்பின்மையின் அடையாளம் மகாத்மா : நூல் வெளியிட்டு ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

மதசார்பின்மையின் அடையாளம் மகாத்மா என தருமபுரியில் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.

தருமபுரியில் தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கட்சியின்  அரசியல் பயிற்சி முகாம் நடைபெற்றது. முன்னதாக  "மகாத்மா மண்ணில் மதவெறி" என்கிற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்டசெயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக நூலை அறிமுகப்படுத்தி ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில்,

கல்கத்தாவில் மதகலவரத்திற்கு எதிராக, மதகலவரத்தில் ஈடுபட்ட குண்டர்களுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கவேண்டுமா? என காந்தியிடம் ராஜாஜி  கேட்கிறார். அதற்கு காந்தி, அந்த குண்டர்களை உருவாக்கியதே நாம்தானே, மதக்கலவரத்தில் ஈடுபடுவோருடைய மனதை தொட விரும்புகிறேன் என்று உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார்.  இதனையறிந்த அன்றைய இளம் தலைவர்களான ஜோதிபாசு, பூபேஷ்குப்தாவும்  சந்தித்தனர். அப்போது நாங்கள் என்ன செய்யவேண்டும் என இருவரும் காந்தியிடம்  கேட்கின்றனர். அப்போது கல்கத்தா நகரம் முழுவதும்  மதநல்லிணக்க பேரணி நடத்துங்கள் என கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள்‌ ஜோதிபாசுவும், பூபேஷ்குப்தாவும் மதநல்லிணக்கத்தை காக்கும் வகையில் இந்து,முஸ்லிம், கிறிஸ்துவர்களை இணைத்து மாபெரும் பேரணி நடத்தினர். பின்னர் கலவரம் அமைதியானது.

அப்போது மவுண்ட் பேட்டன், ராணுவத்தால் சாதிக்க முடியாததை தனிமனிதனாக காந்தி சாதித்துள்ளார் என்று கூறினார். இப்படி உண்ணாவிரதம் மேற்கொண்டு அமைதியை மீட்டனர். இந்த அமைதி ஆர்எஸ்எஸ்-க்கு பிடிக்கவில்லை. காந்தி இருக்கும்வரை மதகலவரம் நடைபெறாது, தங்கள் நோக்கம் நிறைவேறாது என ஜனவரி 30-ம் தேதி காந்தியை படுகொலை செய்தனர்.

காந்தி இந்து மதநம்பிக்கை உடையவர். நவகாளியில் கலவரத்தில் ஈடுபட்டவர்களிடம் நீங்கள் தொழிலாளியாக இருங்கள், விவசாயியாக இருங்கள், மக்களாக இருங்கள், ஆனால் மதத்தை மறந்து விடுங்கள் என்று கூறினார். இன்று மதசார்பின்மையின் அடையாளமாக, மதகலவரத்திற்கு எதிராக நாம் போராடுவதற்கு அடையாளமாக  காந்தி திகழ்கிறார். அதனால் தான் "மகாத்மா மண்ணில் மதவெறி"  என்ற பெயரில் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறோம்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அவர் நடத்திய ஆசிரமத்தில் இனி அகமணமுறை கூடாது, சாதிக்குள்ளே திருமணம் கூடாது  என பேசினார். சாதி மாறி திருமணத்தை நடத்தினார். காந்தியின் மனைவி கஸ்தூரிபா காந்திக்கு  இது பிடிக்கவில்லை. இதைக் கேட்ட காந்தி நாம் பிரிந்து விடுவோமா என மனைவியிடம் கேட்டார். இதனை கேட்டு கஸ்தூரிபாய் காந்தி பயந்துவிட்டார். சாதி மறுப்புத் கருத்தை வலிந்து  ஏற்க வைத்தவர் காந்தி.

75- ஆவது சுதந்திர தினத்தில் டில்லியில் மோடி பேசியபோது 5 முக்கிய விஷயங்களில் ஒன்றாக பெண்ணுரிமை குறித்து ஆக்ரோஷமாக கைகளை அசைத்து  இந்தியில் பேசினார்.

ஆனால் அன்று மாலையே குஜராத் மாநிலத்தில்  இஸ்லாமிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து சிறைசென்ற  மகாபாதகர்களை விடுதலைசெய்தனர். இதுதான் இவர்களின் இரட்டை வேடம். இதனை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். தேசத்தின் ஒற்றுமையை பாதுகாக்க முனைப்போடு கம்யூனிஸ்ட்டுகள் களம் காண வேண்டும். இந்நூல் கம்யூனிஸ்டுகள் மதசார்பின்மைக்காக தலைவர்கள் எப்படி போராடினார்கள் என்பது குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.