புதுக்கோட்டை: ஓமன் நாட்டில மன்னராக இருந்து மறைந்த சுல்தான் காயூஸ்க்கு மேற்பனைக்காடு கிராம இளைஞர்கள் பதாகை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ஓமன் நாட்டில் நீண்ட காலமாக மன்னராக இருந்தவர் சுல்தான் காயூஸ். வயது முதிர்வின் காரணமாக கடந்த 11-ஆம் தேதி உயிரிழந்தார். மேற் பனைக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் ஓமன் நாட்டில் வேலை வேலைசெய்து தங்களது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தனர். அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக திங்கள்கிழமையன்று மேற்பனைக்காடு பகுதியில் இளைஞர்கள் மறைந்த ஓமன் மன்னரின் பதாகை வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஓமன் நாட்டில் வேலைக்காக சென்று திரும்பியுள்ள இளைஞர்கள் மற்றும் ஓமன் நாட்டில் வேலையில் உள்ள இளைஞர்களின் உறவினர் என பலர் பங்கேற்றனர். இதற்கு முன்பு சிங்கப்பூர் அதிபர் மறைந்த போதும் தமிழ்நாட்டில் பல கிராமங்களிலும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.