districts

ஜிஎஸ்டியை எளிமைப்படுத்துக! வணிகர் நலவாரியம் அமைத்திடுக!

சென்னை, மே 5-தமிழகத்தின் கோடிக்கணக்கான வணிகர்களை பாதுகாக்கும் விதமாக ஜிஎஸ்டி வரி விதிப்பை முறைப்படுத்தி, எளிமைப்படுத்தி அமலாக்க வேண்டும் என்றும், வணிகர் நலவாரியம் அமைத்திட வேண்டும் என்றும் சென்னையில் ஞாயிறன்று நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 36 ஆவது வணிகர் தின மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது.இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:மத்திய மாநில அரசு நடைமுறைபடுத்தியுள்ள ஜி.எஸ்.டி வரி விதிப்பை முறைப் படுத்தி, எளிமைப்படுத்தி அடித்தட்டு வணிகர்களும் புரிந்துகொண்டு, வரி செலுத்திட உரிய மாற்றங்கள் கொண்டு வந்து, ஏழு கோடி வணிக குடும்பங்களைக் காத்திட வேண்டும். மேலும் ஜிஎஸ்டி வரியில் தேவையான சில மாற்றங்களை கொண்டுவர வேண்டும். மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். மேலும் விலை நிர்ணயத்தை மத்திய அரசே அறிவிக்க வேண்டும். அனைத்து விவசாய விளைபொருட்கள், ஜவுளிகள், உணவு வகைகளுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்குஅளிக்க வேண்டும். வங்கிப் பரிவர்த்தனைக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரிப் பிடித்தம்செய்வதை ரத்து செய்ய வேண்டும். ஈ - வே பில்லுக்கான உச்ச வரம்பு 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்த வேண்டும். மாதாந்திர கணக்குகள் தாக்கல் செய்து வரி செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். 

சர்வதேச பொருளாதார ஆய்வறிக்கையில், குறிப்பிட்டுள்ளபடி நமது தேசத்தில் 2 அடுக்கு வரி விகிதங்களை (5 விழுக்காடு, 12 விழுக்காடு) மட்டுமே அமல்படுத்த வேண்டும். ஜி.எஸ்.டி. வரிச்சட்டத்தில் படிவங்கள் தாக்கல் செய்வதில் மாற்றம் செய்யவேண்டும். மத்திய மாநில அரசுகள் வசூலிக்கும் ஜி.எஸ்.டி வரியில் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி 60 வயது நிறைவடைந்த அனைத்து வணிகர்களுக்கும் ஒய்வூதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள ஜி.எஸ்.டி வரி விதிப்பில் 1 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் வரும் பட்சத்தில், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளும் அகற்றப்படும் எனமத்திய அமைச்சர் அறிவித்ததை நடைமுறைப்படுத்த வேண்டும். சிறு குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை காக்க உடனடியாக ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்ய வேண்டும். உயர்த்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி வரிகள் வீடுகளுக்கு 50 விழுக்காடு, கடைகளுக்கு 100 விழுக்காடு வரி என்பதை அரசு மறுபரிசீலனை செய்து வரியை குறைக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த ’ஸ்மார் சிட்டி’ திட்டத்தில் கடைகள் இடிக்கப்பட்டு புதிய வணிக வளாகங்கள் அமைக்கும் போது, தற்போது கடை நடத்திவரும் வணிகர்களுக்கு முன்றுரிமை அளித்து கடைகள் ஒதுக்க வேண்டும். வணிகர்களை விசாரிக்கும்நீதித்துறை ஆணையத்தில் வணிகப் பிரதிநிதி ஒருவரை உறுப்பினராக நியமனம் செய்ய உரிய சட்டம் இயற்ற வேண்டும். ரப்பருக்கு கேரள மாநில அரசே விலை நிர்ணயம் செய்வதைப் போல் தமிழகத்திலும் ரப்பருக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

வணிகர் நலவாரியம் அமைத்திடுக!

இந்திய அளவில் வணிகர் நல வாரியம் அமைத்து அதில் அனைத்து மாநில வணிகபிரதிநிதிகளை உறுப்பினர்களாக இணைத்து வணிகம் சம்பந்தமாக அரசு எடுக்கின்ற அனைத்து முடிவுகளையும் வணிகர்களுடன் கலந்து ஆலோசித்து அறிவிக்க வேண்டும்.வணிகர்களின் குறைகளை நாடாளுமன்றத் தில் எடுத்துரைக்க, நாடாளுமன்ற மேல்சபை நியமன உறுப்பினர் ஒருவரையும், மாநிலத்திலும் நியமன சட்டமன்ற உறுப்பினர் ஒருவரையும் வணிகர்கள் சார்பாக நியமிக்க வேண்டும். பாரம்பரிய வணிகத்தை ஊக்கப்படுத்த உரிய நிதி ஆதாரங்களை மேம்படுத்த அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவதுபோல், வணிகர்களுக்கும் இழப்பீடை மதிப்பீடு செய்துஇழப்பீடு வழங்கிட வேண்டும். மாநிலத் தலைநகர் சென்னையில் சிறப்பு ஏற்றுமதி மண்டலத்தை உருவாக்கி, சரக்கு பெட்டக முனையம் அமைத்து, ஏற்றுமதி தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும். தமிழக மேற்கு மண்டலமான சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு பகுதிகளில் பிரதான தொழிலான சாய, சலவை தொழிற் சாலைகளில் வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து பைப்லைன் மூலம் கடலில் கொண்டு சேர்க்கும் திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்ததை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மரபுசார முறையில் புதுப்பிக்கப்பட எரிசக்தியான காற்றாலை, சூரிய மின் சக்தி, சாண எரிவாயு இயற்கை கழிவுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அப்பாவி வணிகர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம், வெள்ளி உட்பட அனைத்துப் பொருட்களையும் எந்தவித நிபந்தனையும் இன்றி திருப்பித்தர வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.