கோவை, நவ.18-
செல்போனில் மாணவிகளிடம் அருவருக்கத்தக்க சாட்டிங் செய்த அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றும் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் பிபிஏ பிரிவின் துறைத்தலைவராக பணியாற்றி வருபவர் துணை பேராசிரியர் ரகுநந்தன். இவர் அப்பிரிவில் பயிலும் மாணவிகள் சிலருக்கு இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் ஆப்பில் தகவல்கள் அனுப்புவதாகவும், மாணவிகளின் பொருளாதார நிலையை தெரிந்து கொண்டு அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக மாணவி ஒருவர் கல்லூரியின் முதல்வரிடம் எழுத்து பூர்வமாக புகார் மனுவை கடந்த சனிக்கிழமை அளித்துள்ளார்.
அப்போது, இதுதொடர்பாக துறை ரீதியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்ட போதும், இதுவரை குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், பாலியல் புகாருக்கு உள்ளான பேராசிரியரை உடனடியாக பணிநீக்கம் செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
இதன்பின் மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், பேராசிரியர் ரகுநந்தன் மீது கல்லூரி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம், தவறிழைத்தவரை காப்பாற்ற முயற்சிப்பதாக சந்தேகம் எழுகிறது. ஆகவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு, இத்தகைய பேராசிரியர்கள் வேறு எங்கும் பணியாற்றாத வகையில் உத்தரவிட வேண்டும் என்றார்.