கோவை தடாகம் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில், சாலையில் நடந்த சென்றவர் படுகாயமடைந்தார்.
கோவை தடாகம் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாகத் தினமும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் உலா வருகிறது. அதனைக் கண்காணிக்கத் தினமும் கோவை சரக வனத்துறையினர் ரோந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் தடாகம் காளையனூர் பகுதிக்குள் வந்த ஒற்றைக் காட்டு யானை அங்குள்ள மனோகர் என்பவர் தோட்டத்திற்குள் முகாமிட்டது.
தகவலறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில் மீண்டும் அதிகாலை 5 மணியளவில் காளையனூர் பகுதிக்குள் வந்த அதே ஒற்றை யானை அவ்வழியாகச் சாலையில் நடந்து சென்ற, தனியார் பேருந்து ஓட்டுநர் கணேஷ் என்பவரைத் தாக்கியது. இதில் இடது கையில் முறிவு ஏற்பட்டுக் காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குக் கணேசன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.