districts

img

கோவை: விவசாயத் தோட்டத்திற்குள் நுழைய முயன்ற காட்டு யானைக் கூட்டம்!

கோவை அருகே நரசிபுரம் பகுதியில் குட்டிகளுடன் விவசாயத் தோட்டத்திற்குள் நுழைய முயன்ற காட்டு யானைக் கூட்டம், வனத்துறையினரால் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.
கோவையில் உள்ள பேரூர், மருதமலை, மதுக்கரை, தடாகம், வடவள்ளி,  தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளை சுற்றி உள்ள கிராமப்புற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைகள் முகாமிட்டு, தொடர்ந்து வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து நரசிபுரம் பகுதியில் குட்டிகளுடன் 7-க்கும் மேற்பட்ட காட்டு யானைக் கூட்டம் நேற்று முகாமிட்டு இருந்தது. இதுகுறித்து வனத் துறையினருக்கு அப்பகுதி விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் அங்கு முகாமிட்டு இருந்த யானைக் கூட்டத்தை விவசாய தோட்டத்துக்குள் நுழைய விடாமல் கண்காணித்து வந்தனர். பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் யானைக் கூட்டத்தை விரட்டினர். யானைக் கூட்டத்தால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் குட்டிகளுடன் யானைக் கூட்டம் வனப்பகுதிக்கு செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.