சென்னை, ஜூன் 29 - பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும் பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவார ணம் வழங்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தி உள்ளது. மாதவரத்தில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்தபோது, விஷ வாயு தாக்கி வாலிபர் இறந்தார். மற்றொரு தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாதவரம் மண்டலம் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் ஒப்பந்த பணியாளராக நெல்சன் (வயது 26), ரவிக்குமார் (வயது 40) வேலை செய்து வரு கின்றனர். இவர்கள் இருவரும் புதனன்று (ஜூன் 29) மாதவரம் முத்துமாரியம்மன் கோவில் தெரு வில் உள்ள பாதாள சாக்கடையில் இறங்கி அடைப்பை சரி செய்ய முற்பட்டனர். அப்போது விஷவாயு தாக்கி இருவரும் அடுத்தடுத்து மயங்கி உள்ளே விழுந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் இருவரையும் மீட்டனர். இந்த விபத்தில் நெல்சன் உயிரிழந் தார். ரவிக்குமார் ஸ்டான்லி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த நெல்சன் குடும்பத் திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) தலைவர் க.பீம்ராவ் கூறுகையில், “உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள போதும், மலக்குழியில் மனிதனை இறக்கி இழிவுபடுத்தி கொல்லும் அவலம் தொடர்கிறது. உயிரிழந்த நெல்சன் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இந்த கொலையில் தொடர்புடைய அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) - 302வது பிரிவின் கீழும், பிற அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது மனிதக் கழிவுகளை அகற்ற மனிதர்களை பணியமர்த்த தடை செய்தல் மற்றும் அவர்களின் மறு வாழ்வு சட்டம் - 2013 மற்றும் ஐபிசி 174, 337 பிரிவுகளின் கீழ் பதிந்து கைது செய்ய வேண்டும். பாதாள சாக்கடை கழிவுகளை அகற்ற முழுவதுமாக எந்திரங்களை பயன்படுத்துவதோடு, இதுபோன்ற கொலைகள் நடக்காத வகையில் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை தர வேண்டும்.” என்றார்.