districts

img

கடலூர் மாவட்ட விவசாயிகளின் தீர்க்கப்படாத பிரச்சனைகள்... - ஜி.ஆர்.இரவிச்சந்திரன்

கடலூர் மாவட்டத்தில் ஏ.சித்தூர் ஆருரான், பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலைகள் விவசாயிகள் பெயரில் வங்கிகளில் கடனை வாங்கி ஆலை நிர்வாகம் எடுத்துக் கொண்டது. இந்த கடனை தேசிய கடன் தீர்ப்பாயம் ஆலைகள் பெயரில் மாற்றி தள்ளுபடி செய்ததாக அறிவிக்கப்பட்டது. மாநில அரசும் பேச்சுவார்த்தையில் அதை உறுதிப்படுத்தியது. இந்நிலையில் தற்போது அம்பிகா சர்க்கரை ஆலையை எஸ்.என்.ஜே டிஸ்டிலரிஸ் நிறுவனம் வாங்கி பணிகளை துவக்கியுள்ளது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பலமுறை போராட்டங்கள் நடத்தி பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் விவசாயிகளின் வங்கி கடனை ஆலைப் பெயரில் மாற்றித் தர வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை.  நெல்லிக்குப்பம் இஐடி பாரி ஆலை கட்டுக் கழிவுக்காக கூடுதலாக பிடித்தம் செய்த கரும்புக்கான பணத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி இயந்திரத்தால் வெட்டிய கரும்பில் பிடித்தம் செய்ததற்கும், பணத்தை மாநில சர்க்கரை ஆணையர் பெற்றுத் தர வேண்டும். எம் .ஆர் .கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் முடிக்கப்படாமல் உள்ள இணை மின் உற்பத்தி திட்ட பணிகளையும் அறிவித்த எத்தனாள் பிளான்ட் திட்ட பணிகளையும் விரைந்து முடிக்கவேண்டும். கடலூர் மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனமாக இயங்கக்கூடிய என்எல்சி நிறுவனத்திற்கு சுரங்க விரிவாக்க பணிகளுக்காக வீடு,மனை,நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளான நிலம் கொடுத்த விவசாயிகள் குடும்பத்தில் இருந்து ஒருவருக்கு நிரந்தர வேலை, மாற்று மனை, வீடு மற்றும் இழப்பீடு கருணத்தொகை உள்ளிட்ட நிவாரணங்களுக்காக பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வரு கின்றோம் ஆனாலும் என்எல்சி நிறுவனம் விவசாயிகளின் கோரிக்கை மீது கவனம் செலுத்தவில்லை. தற்போது என்எல்சியால் தொழில் துறை நோக்கங்களுக்கான சட்டத்தின் நிலம் கையகப்படுத்தப்படுகிறது அதை மாற்றி கனிமவள சட்டத்தின் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடும் உரிய நிவாரணமும் கிடைக்க வாய்ப்புள்ளது. மாவட்டத்திலுள்ள வெலிங்டன், வீராணம், பெருமாள் ஏரி உள்ளிட்ட அனைத்து ஏரி, குளம் வாய்க்கால்களை தூர்வாரிட வேண்டும். வெள்ள காலங்க ளில் கூடுதலாக வரும் காவேரி தண்ணீரை இலிச்சிப்பாளையம் வழியாக வெள்ளாற்று மூலம் வெலிங்டன் ஏரிக்கு கொண்டுவர புதிய மாற்று வழிக்கான பணிகளை பொதுப்பணி துறையும் மாவட்ட நிர்வாகம் துவக்க வேண்டும்.