திருவள்ளுர், டிச.12- ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அம்மப்பள்ளி அணை நிரம்பி உள்ளது. இந்த நிலையில் புதன்கிழமை முதல் அம்மப்பள்ளி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதைத்தொடர்ந்து இரவு முதல் அம்மப்பள்ளி அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நகரி, திருத்தணி, பள்ளிப்பட்டு வழியாக கொசஸ்தலை ஆற்றில் கலந்து பூண்டி ஏரிக்கு வருகிறது. அம்மப்பள்ளி அணை திறப்பால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக திருத்தணி அருகே உள்ள நெடியம், சமந்தவாடா, சுரக்காப்பேட்டை பகுதியில் உள்ள 3 தரைப்பாலங்கள் மூழ்கின. இதனால் அந்த பகுதியை சுற்றி உள்ள கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் வாகனங்கள் பல கிலோ மீட்டர் சுற்றி சென்று வருகின்றன. திருத்தணி, பள்ளிப்பட்டு அருகே கொசஸ்த்தலை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு பாய்கிறது. கொசஸ்தலை ஆற்றின் கரைப்பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திரா மாநிலம் நாகலாபுரம் அருகே உள்ள பிச்சாட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியதால் வியாழன் காலை 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆரணி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம், பூண்டி ஏரி நிரம்பியது பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு காரணமாக புதனன்று விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி ஏரியின் மொத்த உயரம் 36 அடியாகும். தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பூண்டி ஏரிக்கான நீர்வரத்து காலை நிலவரப்படி 1,290 கன அடியாக உள்ளது. நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 35 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.