விழுப்புரம், ஜூன் 18- விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் சிந்தாமணி கிராமத்திலுள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தலித் மாணவர்களை சேர்த்துக் கொள்ளவில்லை என்ற தகவல் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகளுக்கு கிடைத்தது. உடனடியாக சம்மந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்து சென்ற மாவட்டச் செயலாளர் ஏ.சங்கரன் தலைமையில் நிர்வாகிகள் தலைமையாசிரியை சந்தித்து ஏன் பள்ளியில் தலித் மாணவர்களை சேர்க்கவில்லை எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு தலைமை ஆசிரியர் அவ்வாறு நான் கூறவில்லை. தலித் மாணவர்களை பள்ளியில் சேர்த்துள்ளோம் என்று சேர்க்கை பதிவேட்டை எடுத்து காட்டினார். ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த தலித் மாணவர் களை சேர்க்கவில்லையே என்று கேட்டதற்கு தலைமையாசிரியர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்றும் இப் பள்ளியில் படிப்பதற்கு வருகின்ற மாணவர்கள் அனைவரையும் சேர்த்துக் கொள்வது உங்கள் கடமை என்று எடுத்துச் சொல்லி தாங்கள் அழைத்து சென்றிருந்த ஒரத்தூரை சேர்ந்த இரண்டு தலித் மாணவர்களை பள்ளியில் சேர்த்தனர். அப்போது மாவட்ட துணைத் தலைவர் ஏ.கிருஷ்ண மூர்த்தி, வாலிபர் சங்க மாவட்ட துணைத்தலைவர் டி.கிருஷ்ணராஜ், முன்னனியின் ஒன்றிய துனைத் தலைவர் என்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.