கிருஷ்ணகிரி, பிப்.2– ஓசூர், தளி, பேரிகை பகுதிகளில், மலர் சாகுபடிக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை உள்ளதால்,விவசாயிகள் பசுமை குடில்கள் மூலம் அதிக அளவில் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். கிறிஸ்மஸ் புத்தாண்டு காதலர் தினத்திற்காகவும் ஆண்டுக்கு 45 ஆயிரம் மெட்ரிக் டன் உள்நாட்டு, வெளிநாட்டு ஏற்றுமதிக்கான, 8 வகை ரோஜாக்கள் உட்பட 30 வகையான கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இவைகள் இடைத்தளர்களால் வாங்கப்பட்டு 2 நாட்கள் குளிர்சாதன அறைகளில் பதப்படுத்தி, பெங்களூ ருவிலிருந்து விமானத்தில் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடு களுக்கும்,இந்தியாவுக்குள் பல மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இதில் பெரும் தொகை இடைதரகர்களுக்கே கிடைக்கிறது. இதனால் மலர் விவசாயி களின் கோரிக்கையை ஏற்று ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை யில் பேரண்டப்பள்ளி அருகே ரூ.20.2 கோடி செலவில் சர்வதேச மலர் ஏல மையம் 2,000 டன் சேமிப்பு கிடங்கு,குளிர் பதன கிடங்கு,ஏல மையம், தரம் பிரிப்பு கூடம்,16 கடைகள்,கூட்டரங்கம்,பயிற்சி அரங்கம் நவீன வசதிகளுடன் 7.63 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச மலர் ஏழை மையம் 2022 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் 3 ஆண்டுகளை கடந்தும், சர்வதேச மலர் ஏல மையம் முறையான பயன்பாட்டிற்கு வரவில்லை என்பதால் இடைத்தரகர்களிடம் விவசாயிகள் தங்களது லாபத்தை இழந்து வருகின்றனர். ஓசூர் பூக்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனரும், மலர்கள் சாகுபடி விவசாயிகள் சங்க தலைவருமான ஹரிஷ் கூறுகை யில், ஓசூர் சர்வதேச மலர் ஏல மையம் முறையாக செயல்பட்டால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். இடைத்தரகர்களுக்கு 30 முதல் 40 விழுக்காடு வரை கொடுக்க வேண்டியுள்ளதால் பலமுறை நஷ்டம் தான் மிஞ்சுகிறது. சில விவசாயிகள் மனஉலைச்சல் தாங்க முடியாமல் தற்கொலை கூட செய்து கொண்டனர் என்பது வேதனை யாக செய்தியாக உள்ளது. அரசு மானியத்துடன் 1 ஏக்க ருக்கு 50 லட்சம் செலவில் பசுமை குடில்கள் அமைத்து கூலி யாட்கள், மருந்து, செடிகளை பக்குவப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் சிரமப்பட்டு செய்து 55 நாட்கள் கழித்து சாகுபடி செய்து இடைத்தரகர்களுக்கு 30 முதல் 40 விழுக்காடு வரை கொடுக்க வேண்டி உள்ளதால் நஷ்டம் தான் மிஞ்சுகிறது. எனவே உடனடியாக தமிழ்நாடு அரசு இடைத்தரகர்கள் முறையை ஒழித்து நேரடி விற்பனைக்கு வழி வகுக்க வேண்டும்,மலர் ஏழை மையத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்றார். கென்யா, எத்தியோப்பியா, சைனா போன்ற நாடுகளில் விவசாயம் மற்றும் கொய்மலர் சாகு படிக்கு அரசு விவசாய நிலங்களை இலவசமாகவும், ஏராள மான சலுகைகளையும் வழங்கு கிறது. இதனால் உற்பத்தி செலவு குறைவு என்பதால் அங்கி ருந்து குறைந்த விலைக்கு கொய்மலர்களும்,குறைந்த விலை யில் உற்பத்தி செய்யப்படும் செயற்கை மலர்களும் இந்தியா வுக்குள் இறக்குமதி செய்யப்படு கிறது . கால நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாலும், டௌனியா நோய் தாக்கத்தாலும் பெரும்பகுதி உற்பத்தி பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இடைத்தரகர்களாலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பூக்கள் விலையும் ரூ.25 முதல் 50 வரை கடந்த ஆண்டு விற்பனையாகி வந்த நிலையில் இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் ரூ.15 வரை மட்டுமே விலைக்கு வாங்குகின்றனர். 50 விழுக்காடு உற்பத்தி பாதிப்பு,கடும் விலை வீழ்ச்சி,இடைத்தரகுகளால் பாதிப்பு, வெளிநாட்டு மலர்கள் மிகக் குறைந்த விலையில் இந்தியாவுக்குள் இறக்குமதி,விமான ஏற்றுமதி கட்டணங்களும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில்,மேலும் ஒரு திடீர் தாக்குதலாக ரோஜாக்களை ஏற்றுமதிக்காக இதுவரை செய்து வந்தது போல் அட்டைகளால் சுற்றி வைத்தால் அதற்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. மலர்களை அப்படியே ஏற்றுமதி செய்வது என்பது மலர்களின் பாதுகாப்பிற்கு ஏற்றதில்லை என்ற நிலையில் அட்டைகளால் சுற்றி வைப்பதற்கு ஒன்றிய அரசு ஜிஎஸ்டி விதிப்பதால் மலர் உற்பத்தி விவசாயிகளுக்கு மேலும் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.எனவே அட்டையால் சுற்றி வைப்பதற்கு ஜிஎஸ்டி விதிப்பதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் எனவும் மாவட்ட விவசாயிகள் சார்பாக கோரிக்கை விடுத்தார். - ஒய்.சந்திரன்