சென்னை, மே 14 - நுகர்வோருக்கு சிறப்பான சேவை வழங்க வாரியம் தரமான தளவாட பொருட்களை வழங்க வேண்டும் என்று மின் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) தெற்கு சென்னை திட்ட கிளை-1ன் மாநாடு சனிக்கிழமையன்று (மே 14) கிண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், பிபி-2 சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும், பணியிடங்களில் பாலியல் புகார் கமிட்டிகளை அமைக்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு உடனடியாக தினக்கூலி வழங்க வேண்டும், பகுதிநேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு கிளைத்தலைவர் கே.தரணி தலைமை தாங்கினார். போரூர் கோட்ட நிர்வாகி வி.விஜயபாஸ்கர் வரவேற்றார். சிஐடியு மாவட்ட பொருளாளர் ஏ.பழனி சங்க கொடியை ஏற்றினார். போரூர் கோட்டச் செயலாளர் எஸ்.பழனி அஞசலி தீர்மானத்தை வாசித்தார். மாநில துணைத் தலைவர் என்.பால்ராஜ் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை செயலாளர் ஏ.முருகானந்தமும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் டி.பண்டராம் பிள்ளையும் சமர்ப்பித்தனர். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பி.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு மின் பொறியாளர் அமைப்பின் மாநில பொருளாளர் கே.ஆதன்இளங்கீரன், மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் இ.விஜயலட்சுமி, கிளை செயலாளர் டி.அன்பழகன் (தெற்கு 2), டி.தேவகுமார் (செங்கல்பட்டு), ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் வி.பங்குனியான் உள்ளிட்டோர் பேசினர். மத்திய அமைப்பின் மாநில துணை பொதுச் செயலாளர் கே.அருட்செல்வன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். கே.கே.நகர் கோட்ட நிர்வாகி எஸ்.குமார் நன்றி கூறினார்.
நிர்வாகிகள்
கிளையின் தலைவராக வி.விஜய பாஸ்கர், செயலாளராக டி.பண்டராம் பிள்ளை, பொருளாளராக எஸ்.குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.