சென்னை,ஜன.5- எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவில் கடந்த 4 மாதங்களில் 3 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மருத்துமனையை மண்டல சிகிச்சை மையமாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அரிய வகை நோய்கள், சிக்கலான அறுவை சிகிச்சைகள் என பல நோய்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சென்னை அரசு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சர்வதேச தரம் வாய்ந்த அறுவை சிகிச்சைப் பிரிவுகள், அரங்குகள், மருத்துவ சாதனங்கள், நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் உள்ளனர். குழந்தைகளுக்கான அனைத்து வகையிலான நோய்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் செலவாகும் நோய்களுக்கும் இங்கு இலவசமாக தரமான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், பிரத்யேகமாக ரூ.5.90 கோடி மதிப்பில், ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம் அண்மையில் துவக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஆண்டுக்கு 60 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். மேலும் முக்கிய அறிவிப்பாக, அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: சென்னை, எழும்பூரில் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ. 5.9 கோடி செலவில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டது. இந்தப் பிரிவு கடந்த செப்டம்பர் 2024 இல் செயல்படத் தொடங்கியது. இந்த எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைப் பிரிவின் மூலமாக தலசீமியா, அப்ளாஸ்டிக் அனீமியா மற்றும் ரத்தப் புற்றுநோய், ரத்தக் கோளாறுகளுக்கு உயிர்க் காக்கும் மற்றும் குணப்படுத்துவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் மூன்று குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை ஒரு நோயாளிக்கு செலவாகும். முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏழைக் குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும் வகையில், இந்த மருத்துவமனையை மண்டல சிகிச்சை மையமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். தற்போது அறுவை சிகிச்சை அளிக்கப்பட்ட மூன்று குழந்தைகளும் நலமாக உள்ளனர். அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட குழுவுக்கு பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.