கியூபா மீதான பொருளாதார தடையை விலக்கிடுக!
சோஷலிச நாடான கியூபாவின் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. உலக நாடுகள் கியூபாவுடன் சுதந்திரமான வர்த்தகத்தை மேற்கொள்ள தடை, மிக மோசமான ஹெல்ம்ஸ் - பர்ட்டன் சட்டம் ஆகியவற்றை அமலாக்கி தொடர்ச்சியாக கியூபாவை வஞ்சித்து வரும் அமெரிக்கா, டொனால்டு டிரம்ப் அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்த நேரத்தில் மேலும் கூடுதலாக 243 தடைகளையும் விதித்தது. அமெரிக்காவின் இத்தகைய மனித நேயமற்ற அராஜக நடவடிக்கைகள் வெறுமனே பொருளாதார தடைகள் என்பதை விடவும், உன்னதமான சோஷலிச சித்தாந்தத்தின் மீதான ஏகாதிபத்தியத்தின் அருவருப்பான தாக்குதல் தான் என்பது தெளிவு. பொருளாதார சிரமங்களை ஏற்படுத்தி சோஷலிச அரசின் மீது அதிருப்தியை உருவாக்கி, அரசை கவிழ்க்க வேண்டும் என்பது 1960இலிருந்து அமெரிக்க அரசின் கொள்கை. இந்நிலையில் கியூபா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை திரும்பப் பெற வேண்டுமென அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 184 நாடுகளும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. ஆனாலும் அமெரிக்க தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இத்தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்துள்ளது.
ஒரு புறம் பொருளாதார தடையை விதிக்கும் அமெரிக்கா, மறுபுறத்தில் தங்கள் ஆதரவாளர்களை கொண்ட கலகங்களை அமெரிக்காவின் மியாமி, புளோரிடா பகுதிகளிலும், கியூபாவிலும் நடத்த தொடர்ச்சியான முயற்சியை எடுத்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற அத்தகையதொரு முயற்சியையும் கோடிக்கணக்கான கியூப மக்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். பொருளாதார மற்றும் வர்த்தக தடைகளின் மூலமாகவும், உள்நாட்டு கலகங்களை தூண்டி விடுவதன் மூலமாகவும் கியூபாவை வீழ்த்தி விடலாம் எனும் அமெரிக்காவின் நடவடிக்கைகளை கண்டிப்பதோடு, கியூபா மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்து தடைகளையும் முழுமையாக விலக்க வேண்டுமெனும் கோரிக்கையை முன்வைத்தும் சகோதர ஆதரவு இயக்கத்தை வலுவாக நடத்திட வேண்டுமென அனைத்து ஜனநாயக அமைப்புகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இந்திய ஒன்றிய அரசும், கியூபாவுக்கு அரசியல் ரீதியாக ஆதரவு அளிப்பதோடு, அந்நாட்டிற்கு தேவையான உதவிகளையும் அளிக்க முன்வர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்புக்கு மேலும் கால நீட்டிப்பு வழங்கக் கூடாது!
தமிழகத்தில் கொரோனா நோய்ப்பரவல் உச்சத்தில் இருந்தபோது, நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனுக்கு கடுமையான பற்றாக்குறை இருந்தது. அந்த நேரத்தில், ஸ்டெர்லைட் போட்ட மனுவின் மீது உச்சநீதிமன்றம் தமிழக அரசின் கருத்தை கேட்டது. அதற்காக நடந்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில், சிகிச்சைக்கு தேவையான அளவில் கூடுதலான ஆக்சிஜனை தயாரிப்பதற்காக மட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு தற்காலிக அனுமதி வழங்கலாம் என்று அரசு தரப்பில் ஆலோசனை வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட்டின் கடந்த கால மோசமான நடவடிக்கைகள், போராடிய மக்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு போன்றவற்றையும் நினைவுபடுத்தி, அதே சமயம் கொரோனா பேரிடரின் பின்னணியில் ஒட்டு மொத்த தமிழக நலனை கணக்கில் எடுத்து, அரசின் ஆலோசனைக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது. அதன்படி ஜூலை 31 வரையிலான காலத்திற்கு ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் தற்காலிகமாக அனுமதி அளிக்கப்பட்டது.
அன்றைய நிலையில் தமிழகத்தில் மொத்தம் 230 மெட்ரிக் டன் என்ற அளவில் ஆக்சிஜன் உற்பத்தி இருந்தது. அதற்கு பிறகு உற்பத்தி படிப்படியாக உயர்த்தப்பட்டு தமிழகத்தில் ஆக்சிஜன் தயாரிப்பின் அளவு 650 மெட்ரிக் டன்னாக உயர்ந்து உள்ளது. தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன் போதுமான அளவில் இப்போது கையிருப்பில் உள்ளதாக அண்மையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் தெரிவித்திருக்கிறார். எனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு ஜூலை 31 வரையிலும் வழங்கப்பட்ட தற்காலிக அனுமதியை மேலும் காலநீட்டிப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும், அதற்கு பிறகு அத்தொழிற்சாலையில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது எனவும், ஆலையை பூட்டி சீல் வைக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.