போலி மருந்து தயாரிப்பு விவகாரம்
சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு புதுச்சேரி ஆளுநர் பரிந்துரை
புதுச்சேரி, டிச.22- போலி மருந்து தயாரிப்பு விவகாரத்தில் சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளார். புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலைகள், குடோன்களை சிபி சிஐடி கண்டறிந்து சீல் வைத்து உரிமை யாளர் ராஜா உட்பட 16 பேரை கைது செய்துள்ளது. மருந்து மாத்திரைகள் 16 மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப் பட்டிருந்ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், திமுக, தொடங்கி ஆளும் கூட்டணியில் உள்ள பாஜகவும் சிபிஐ விசாரணை கோரின. தேசியக் கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் துணைநிலை ஆளுநரிடம் மனு தந்தன. பல சமூக அமைப்புகளும் கோரிக்கை வைத்திருந்தனர் .ஆளுநரிடம் மனு தந்தும் நடவடிக்கை இல்லாததால் தில்லி சென்று காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. பாஜக தரப்பில் பேரவைத் தலைவர் செல்வம், முதல்வர் நாராயணசாமி ஆட்சியில்தான் இந்த தொழிற்சாலைகளுக்கு உரிமம் தந்தனர் என்றும் குற்றம்சாட்டியது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “எந்த விசாரணைக்கும் நான் தயார். அதேநேரத்தில் போலி மருந்து விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், பேரவைத் தலைவர் செல்வம் மற்றும் பாஜக தலை வர்களுக்கு தொடர்பு உள்ளது. அவர்கள் விசாரணைக்கு தயாரா?” என்று கேட்டார்.போலி மருந்து விவகாரம் கடும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில், சிபிசிஐடி விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நபர்கள் தொடர்பு கொண்டு இருப்பதாலும், தேசிய அளவிலான விசாரணை அவசியம் என்ற காரணத்தினாலும், இது தொடர்பான விசாரணையை சிபிஐ மற்றும் என்ஐஏ அமைப்புகள் மேற்கொள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரைத்துள்ளார்.
மாடவீதியில் மினி பேருந்துகளை இயக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவண்ணாமலை, டிச.22 அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் மினி பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில் மாட வீதியில், சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தீபத் திருவிழா நடைபெற்றதால், மாட வீதிகளில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மாடவீதிகள் வழியாக செல்லும் பொதுமக்கள் ஆட்டோவில் செல்ல அதிக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டிருந்தது. தற்போது தீபத் திருவிழா முடிந்த நிலையில் கார்கள் மட்டும் மாடவீதியில் அனுமதிக்கப்படுகிறது. அதே போல், ஏழை மக்கள் குறைந்த கட்டணத்தில் நகர பேருந்தில் செல்வதற்கு வசதியாக, மினி பேருந்துகளை மாடவீதிகளில் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்தங்கரையில் விவசாய தொழிலாளர் வட்டமாநாடு
கிருஷ்ணகிரி , டிச.22- அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் வட்ட நான்காவது மாநாடு ஊத்தங்கரையில் நடைபெற்றது. வட்டத் தலைவர் ஆர்.லெனின் தலைமை தாங்கினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.கே. நஞ்சுண்டன் துவக்க உரையாற்றினார். செயலாளர் கே.செல்வராசு வேலை அறிக்கை,வரவு செலவு சமர்ப்பித்தார். மார்க்சிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் சபாபதி வாழ்த்தி பேசினார். ஊத்தங்கரை வட்டத்தில் 100 நாள் வேலையை மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் முழுமையாக வழங்க வேண்டும்,முழு ஊதியம்,நிலுவையில் உள்ள ஊதியம் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநில செயலாளர் எம்.முத்து நிறைவுரையாற்றினார். நிர்வாகிகள் தேர்வு வட்ட தலைவராக டி.கிருஷ்ணன் செயலாளராக ஆர்.லெனின் பொருளாளராக துரைசாமி தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக உஷா நன்றி கூறினார்.
மாடியில் இருந்து கீழே குதித்து இளம் பெண் தற்கொலை
சென்னை, டிச. 22- சென்னை சாலிகிராமத்தில் மாடியில் இருந்து கீழே குதித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலிகிராமம் காந்தி நகர் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் பிச்சாண்டி. இவர் மனைவி லாவண்யா (29). இவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு, அவதியடைந்து வந்தார். இதற்காக லாவண்யா, மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால் லாவண்யா மிகுந்த வேதனையுடனும், விரக்தியுடனும் இருந்து வந்தார். இந்நிலையில் லாவண்யா, தான் வசிக்கும் வீட்டின் 2ஆவது மாடியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை கீழே குதித்தார். இதில் பலத்தக் காயமடைந்த லாவண்யா, அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த லாவண்யா, திங்கட்கிழமை அதிகாலை இறந்தார். இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூரில் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை என பேனருடன் வந்த பொதுமக்கள்
வேலூர், டிச.22 – வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாநகராட்சி கஸ்பா ஆர்.என்.பாளையம் தொரப்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கப்பட்டது.அம்மனுக்கள் மீது இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், விரைந்து வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு “உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுத்த அனைவருக்கும் பட்டா வழங்க கோரி” வாசகம் அடங்கிய பேனருடன்ஊர்வலமாக வந்து மனு அளித்தனர்.இதே போன்று மேல்மொனவூர் பகுதியை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் தனக்கு மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்தும் இதுவரை வரவில்லை எனக் கூறி திங்களன்று மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென அதிகாரிகள் முன்னிலையில் சாமி வந்து ஆடி “நான் சாமி வந்திருக்கிறேன், எனக்கு நியாயம் கிடைக்கனும் நான் சாமி வந்திருக்கேன்” என கூறி சாமி ஆடினார். பின்னர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவரை அமர வைத்து மனுவை வாங்கி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.
தனிநபர் கடன்கள் நிபந்தனை இன்றி வழங்க கோரிக்கை
திருவண்ணாமலை, டிச.22- சிறுபான்மையின பெண்களுக்கான தனிநபர் கடன்களை, பிணயம் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் இன்றி வழங்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர், சிறுபான்மை நல ஆணையத்தின் சார்பாக திங்க ளன்று (டிச. 22) வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடன் மேளா நடத்தப்பட்டது. சிறுபான்மை நல ஆணைய அலுவலர்கள், கூட்டுறவு வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்ட தலைவர் கா. யாசர் அராபத், மாவட்ட செயலாளர் அப்துல் காதர், மாவட்ட குழு உறுப்பினர் ஜீனத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் கலந்தாய்வுக் கூட்டம் 9 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு
திருவண்ணாமலை, டிச.22- திருவண்ணாமலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான மண்டல அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் திங்களன்று (டிச.22) நடைபெற்றது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் தலைமையில் சென்னை தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், ராணிபேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இர.சுப்பு லெட்சுமி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி யர் எம்.எஸ் பிரசாந்த், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.