districts

img

அடிப்படை வசதிகள் செய்து தராமல் அவசர கோலத்தில் திறக்கப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பு

குடிசையில் வாழும் ஏழைகளுக்கு சுகாதாரமான இருப்பிடத்தை உத்திரவாதப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் குடியிருப்பு. ஆனால் பெரும்பாலான இடங்களில் இதன் இலக்கு நிறைவேற்றப்படுகிறதா என்றால் கேள்விக்குறியே. சுனாமி போன்ற இயற்கை பேரிடரில் பாதிக்கப்பவர்கள், கடல் அரிப்பு மற்றும் சாலை விரிவாக்கத்தால் வீடு இழந்தவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட ஆரோக்கியமான குடியிருப்பு வழங்குவதே இந்த தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் நோக்கமாகும். 1970இல் சென்னையில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் 1984இல் விரிவுபடுத்தப்பட்டது. உலக வங்கியின் மூலம் நிதி வழங்கப்பட்டு குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும ஆணையத்தின் வழிகாட்டுதலில் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. பயனாளிகளின் பங்களிப்போடு குடிசைமாற்றுவாரியம் இந்த நல்ல காரியத்தை செய்து வருகிறது சேரிகள் இல்லா தமிழகத்தை உருவாக்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கம் என்று கூறப்பட்டாலும் பெரும்பாலான குடிசைமாற்று வாரிய குடியிருப்புக்கள் உரிய பராமரிப்பு இன்றி சீர்கேடு அடைந்து வருகிறது.

 அரசின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் சில அரசுத்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கும் லாப நோக்கும் ஏழை எளிய மக்களின் ஆரோக்கியமான வாழ்வாதாரத்தை நாசம் செய்து வருவதாக கூறப்படுகிறது. கட்டப்படும் ஒவ்வொரு குடியிருப்பும் ஒரு குறிப்பிட்ட அளவில் படுக்கையறை, சமையலறை, கழிப்பறை அமைக்கப்பட்டு நீர் வழங்கல், நடைபாதை, பாதாளசாக்கடை, பூங்கா, தெருவிளக்கு, மழைநீர் வடிகால் உள்ளிட்ட வசதிகள் உரிய முறையில் அமைக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தற்போது 1 லட்சத்து 30 ஆயிரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன.

                              இதில் குடியமர்த்தப்பட்ட குடும்பங்களிடம் 20 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் அந்த பகுதிக்கு ஏற்றவாறு ரூ 50 முதல் ரூ 250 வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. வாரியத்தின் சார்பில் பணியாட்களை நியமனம் செய்து இந்த தொகை வசூலிக்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால் பெரும்பாலான இடங்களில் இப்பணிக்கான பணியாளர்கள் நியேமிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. பிரதமர் மோடி வீடுகட்டும் திட்டத்திற்குதான் அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் ஏனெனில் அதில் லஞ்சம் அதிகம் கிடைப்பதாக புகார் எழுந்துள்ளது. குடிசைமாற்றுவாரிய உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட சிலர் லஞ்சம் பெற்றுக்கொண்டு வீடுகள் ஒதுக்கீடு செய்வதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். அன்னை சிவகாமி நகர் இந்திராகாந்தி குப்பத்தில் உள்ள மக்களை கடல்அரிப்பு காரணமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி எர்ணாவூர், நேதாஜிநகர் எதிரே உள்ள  புதிய குடிசைமாற்றுவாரிய குடியிருப்பில் குடியமர்த்தப்பட்டனர். இந்திராகாந்தி குப்பம் திட்டப் பகுதியில் 128 வீடுகள், 10.91 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டன. கடுமையான போராட்டங்கள், மக்கள் எதிர்பார்ப்புகள் இடையே கட்டப்பட்ட, நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாமலேயே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் என்பது வேதனையான செய்தியாகும்.

புதிய குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில், பயனாளிகள் தொகை நிலுவை மற்றும் மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்கிய பின், ஓரிரு மாதங்களில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்படாமல் வீடுகள் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டபோது, பயனாளிகள் மற்றும் குடிசைமாற்றுவாரியம் வழங்க வேண்டிய வரித்தொகை செலுத்தாததால் இணைப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளது, மேலும் இப்பகுதியில் கட்டப்பட்ட பால்வாடி, சிறுவர்கள் பூங்கா திறக்கப்படாமலேயே பழுதடைந்து வருகிறது. இந்த குடியிருப்பின் பிரதான வாயில் பகுதி முறையாக கட்டப்படாமல் குப்பைகள் கொட்டப்பட்டு புதர்மண்டிக் கிடக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, எங்களை அவசரஅவசரமாக குடியமர்த்தினார்கள், தெருவிளக்கு, பாதை பராமரிப்பு, பூங்கா, உள்ளிட்ட அடிப்படையான எந்த வசதியும் செய்து தரப்படவில்லை, வசதி படைத்தவருக்கும் ஆளும்கட்சிக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் இங்கு வீடுகள் வழங்கப்படுகிறது. பாதாளசாக்கடை இணைப்பு கொடுக்கப்படாததால் செப்டிக்டேங்க் அமைத்து அதில் கழிவுநீர் சேமிக்கப்படுகிறது.

மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிமுழுவதும் கழிவுநீர் வெள்ளம் போல் ஓடுகிறது. ஒரு குடும்பம் தொடர்ந்து மலத்தின் துர்நாற்றத்தில் எப்படி வாழமுடியும்,  பாதாளசாக்கடை இணைப்பு கேட்டு மனு அளித்தால் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.   எர்ணாவூர் ஆல்இந்தியா ரேடியோ நகரில் சுமார் 3,500 குடும்பங்கள் வசிக்கின்ற சுனாமி குடியிருப்பு பகுதியிலும் கழிவுநீர் அகற்றுவதில் சிக்கல் உள்ளதாக சர்வசாதாரணமாக கூறினார். குடியுரிமை என்பது தேசத்தின் அரசோடு கொண்டுள்ள பிணைப்பை காட்டுவதாகும். குறிப்பிட்ட ஒருஇடத்தில் வசிப்பது என்பது வாழ்வதோடு மட்டுமே சம்மந்தப்பட்டதாகும். நிரந்திரமான, சுகாதாரமான ஒரு வசிப்பிடத்தை தராத அரசு குப்பைக்கு சமம் என்று சொல்லலாம் என்றால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் குப்பை கூட உரம் தயாரிக்கப்படுகிறதாம். -ம.மீ.ஜாபர்