districts

img

கட்டுமான தொழிலாளி மாயம்: ஜூன் 8அன்று சிஐடியு ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன் 1- எண்ணூரில் தங்கி கட்டிட வேலை செய்த வடமாநில தொழிலாளி காணாமல் போனது தொடர்பாக காவல் துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று சிஐடியு  குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து சிஐடியு மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் வடசென்னை மாவட்ட  நிர்வாகிகள் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 2வது  தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் செந்தில் என்பவர் வீட்டில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 6.5.2022 அன்று செங்குன்றத்தை சேர்ந்த மேஸ்திரி ராம் என்பவர் மூலம் சோரிப், சாணோ ஆகிய இரண்டு வடமாநில  தொழிலாளர்கள் வேலைக்கு  வந்துள்ளனர். இருவரும் வேலை செய்து  வரும் இடத்திலேயே தங்கி வேலை செய்து  வந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதியன்று பிற்பகல் கட்டிடத்தின்  உரிமையாளர் செந்திலுக்கும் கட்டுமான தொழிலாளி சோரிப்புடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் சாணோ என்ற தொழிலாளியை மட்டும்  வேலைக்கு வேண்டாம் என்று கூறி திருப்பி அனுப்பியதாக வும் சோரிப்பை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்  வீட்டிற்கு திரும்பாத நிலையில்  எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று கூறி சோரிப்பின் சொந்த ஊரான கல்கத்தாவிலுள்ள முர்சிதாபாத் உள்ளிட்ட இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

 இதனைத்தொடர்ந்து கடந்த மே 23 ஆம் தேதியன்று எண்ணூர் காவல் நிலையத்தில்  சென்னை பெருநகர கட்டுமான  தொழிலாளர் சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில் இது வரையிலும் காணாமல் போன வட மாநில தொழிலாளர் சோரிப் பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லை. வீட்டின் உரிமை யாளர் செந்தில் என்பவருக்கும் வட மாநில தொழிலாளிக்கும் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் வடமாநில தொழிலாளர் காணாமல் போனது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு உடனடியாக தொழிலாளியை மீட்டுத்தர வேண்டும், தாமதிக்கும் பட்சத்தில்   கட்டுமான சங்கம், சிஐடியு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி  சார்பில் ஜூன் 8 அன்று மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த  உள்ளதாக சிஐடியு  வடசென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன், பெருநகர் கட்டுமான சங்கம் வடசென்னை மாவட்ட செயலாளர் லூர்து, திருவொற்றியூர் பகுதி செயலாளர்  அன்பு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.