சென்னை, பிப்.1- தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு குட்கா விற்பனை தடை செய்யப்பட்டது. பின்னர் ஆண்டு தோறும் இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. தடையை மீறி விற்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சென்னையில் கடைகளில் குட்கா மற்றும் புகையிலை விற்பனை அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக புதிய சட்டம் விரை வில் வரவிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை உணவு பாதுகாப்பு துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பொது மக்களின் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. எனவே கடை வியாபாரிகள் இந்த பொருட்கள் விற்பனையை தவிர்க்க வேண்டும். குட்கா விற்பனையை தடுக்க தேவைப்பட்டால் கூடுதல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றார். இதற்கிடையே நீதிமன்றத்தின் அனுமதி காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக குட்கா, பான்மசாலா போன்றவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. தடை இருந்தபோது மறைவாக விற்றவர்கள் தற்போது நீதிமன்ற அனுமதி காரணமாக பகிரங்கமாக விற்பனை செய்கிறார்கள். எனவே உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தும் இந்த புகையிலை பொருட்கள் விற்பனைக்கும் நுகர்வுக்கும் தடைவிதிக்க மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.