districts

விடுதி துணை காப்பாளர் போக்சோ சட்டத்தில் கைது

ஆரணி, மார்ச் 13- ஆரணி அருகே அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு ஓரினச்சேர்க்கை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விடுதி துணை காப்பாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பத்தியாவரம் கிராமம் சூசை நகர் பகுதியில் புனித வளனார் ஆண்கள் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிஉள்ளது. இந்த பள்ளி 1976ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த பள்ளியில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி அருகாமையிலேயே இந்த பள்ளிக்கான விடுதி உள்ளது இந்த விடுதியில் வெளியூரைச் சேர்ந்த 113 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை விடுதியில் தங்கி பயின்று வரும் 9, முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் திருவண்ணாமலை சமூக நலத்துறைக்கு இணையதளம் மூலம் 8 மாணவர்கள் புகார் அளித்தனர்.  அந்த புகாரில் விடுதி துணை காப்பாளர் துரைப்பாண்டி (35) என்பவர், விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை  ஓரின சேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தனர். அந்த புகாரின் பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட 8 மாணவர்களை திருவண்ணாமலையில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் துணை விடுதி காப்பாளர் துரைப்பாண்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது உண்மை எனத் தெரிய வந்தது. பின்பு அவர் மீது சமூக நலத்துறை அதிகாரிகள் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விடுதி துணை காப்பாளர் துறைப்பாண்டியை கைது செய்தனர்.