செங்கல்பட்டு, ஆக.25- தலித் கிறிஸ்தவர்களையும் பட்டியல் சாதியினராக அறிவித்திட வலி யுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தலித் கிறிஸ்தவர் மாநில வாழ்வுரிமை சிறப்பு மாநாடு செங்கல்பட்டில் ஆகஸ்ட் 23 அன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற தலைவர்கள் பேசியதன் சுருக்கம் வருமாறு:
அனைத்து உரிமைகளையும் உறுதிசெய்க!
சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பி னர் கே. பாலபாரதி: அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோதும், திமுக தலை வர் கலைஞர் ஆட்சியில் இருந்த போதும் தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
இயக்கமும் போராட்ட குணமும் இயற்கையாகவே இணைந்திருக்கும் தலித் கிருத்துவர்களும் அந்த மக்க ளின் குழந்தைகளும் கல்வி உட்பட பல்வேறு வகைகளில் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் அந்த மக்களை பட்டியலின பிரிவில் இணைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டம் தான் மதவாத சக்திகளை பின்னுக்கு தள்ளியது. 1998-க்கு பிறகு அடையாள அரசியலை முன் நிறுத்தி யதன் விளைவாக நாடு முழுவதும் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இந்திய நாட்டை சார்ந்தவர்கள் அல்ல என்ற தாக்குதல் நடந்து கொண்டிருக் கிறது.
கிறிஸ்தவம், இஸ்லாம் மதங் களுக்கு மாறி இருக்கும் தலித் மக்களுக்கு அனைத்து சலுகைகளும் உரிமைகளும் கிடைக்க வேண்டும். இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள தலித் கிறிஸ்தவர்களை ஒன்று திரட்டி போராடுவோம்.
போராட்டம் தொடரும்
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ்: சுதந்திரம் அடைந்த இந்தியா வில் 62 ஆண்டுகள் கழித்துத் தான் தமிழ்நாட்டில் அருந்ததியர் மக்கள் தங்களுக்கான அரசியல் உரிமை பெற முடிந்தது. ஆனால், போராட்டத்தை துவக்கிய போது, இந்த கோரிக்கை வெற்றி பெறாது, வெறும் கனவு மட்டுமே காண முடியும் என்று சிலர் எள்ளி நகையாடினர். இதனால் அம்மக்கள் கோரிக்கையைக் கைவிட இருந்த நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த கோரிக்கையை வலுவாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று வெற்றியை சாத்தியமாக்கியது.
இந்த மண்ணில் பாதாள சாக்கடை மரணம், ஆணவக் கொலைகள் என எத்தனை மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த பிரச்ச னைகளுக்கும் முடிவு கட்ட முடியும் என்ற நம்பிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தமிழ் நாடு மக்களுக்கு அளித்திருக்கின்றன.
சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற இரட்டை படுகொலையில், அண்ணன் கிறிஸ்த்துவர், தம்பி இந்து. இவர்கள் இருவரும் பிறப்பால் தலித்கள். எனவே, சாதி ஆதிக்க சக்திகளால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டனர். இருவரில் தம்பிக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நிவாரணம் பெற முடிந்தது. ஆனால் தலித் கிறிஸ்தவர் என்ற ஒரே கார ணத்திற்காக அண்ணனுக்கு வன்கொடு மை தடுப்புச் சட்டத்தில் நிவாரணம் பெற முடியவில்லை. இதுவே அநீதியின் சாட்சியாக உள்ளது. இதே நிலைமை அனைத்து கிராமங்களிலும் இருப்பதை நாம் பார்க்கிறோம். இந்த கொடூரமான அநீதி 74 ஆண்டுகள் ஆன பின்னரும் தொடர்கிறது இந்த அநீதியை இந்த மாநாட்டின் மூலம் உடைத்தெறிய வேண்டும். இந்த மாநாட்டில் நிறைவேற்றி இருக்கும் தீர்மானங்களை அனைத்து தலித் கிறிஸ்துவ மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
இந்த மாநாட்டில் பேசியிருக்கும் அருட்தந்தையர்கள், ஆதரவாளர்கள் அனைவரும், இந்த பணியை விட்டு விடக்கூடாது. தொடர்ந்து முன் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர். நாம் தொடங்கியிருக்கும் இந்த அணி வகுப்பு தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் இணைக்கும் வரை தொட ரும். நிச்சயம் கோரிக்கையை வென் றெடுப்போம்.
மதம் மாறினாலும் சாதி துரத்துகிறது
தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணைப்பொதுச் செயலாளர் க. சுவாமிநாதன்: ரங்கநாத் மிஸ்ரா அறிக்கைதான் 2007 ஆம் ஆண்டில் தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் சாதியினராக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. அதற்கான நியாயங்களையும், தரவுகளையும் அழுத்தமாக கூறியிருக்கிறது. மதம் மாறினாலும், இவர்களால் சாதியை கடக்க முடியவில்லை என்கிற உண்மை நிலைமைகளை ஆதாரப்பூர்வ மாக நிரூபித்திருக்கிறது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால், அந்த உரிமை தலித் கிறிஸ்தவர்களுக்கு மறுக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்? எனவே மதம், சாதி, இனம் என்கிற ஒடுக்குமுறையில் இருந்து விடுவிக்க வேண்டிய கடமை ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது என்பதையும் ரங்கநாத் மிஸ்ராவின் குழுவின் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இந்த மாநாடு முன் வைத்திருக்கும் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்.
இவ்வாறு தலைவர்கள் பேசி னார்கள்.