districts

img

திறந்தவெளி சேமிப்பு மையத்தில் 25 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளைப் பாதுகாப்பின்றி வைத்திருப்பதால் மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்துள்ள கட்டவாக்கம் பகுதியில், கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி முதல் திறந்தவெளி சேமிப்பு மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் தற்போது விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 254 மெட்ரிக் டன் நெல் உள்ளது . காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜபத் ஒன்றியத்துக்குட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளான ஊத்துக்காடு, தென்னேரி, கட்டவாக்கம், ஐம்பொன்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நான்கு மாதங்களாக நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழை காரணமாகச் சாலையில் வெள்ள நீர் வழிந்தோடுகிறது. சேமிப்பு மையத்தில் அடுக்கி வைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருகிறது.

தமிழகத்தில் ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வரும் இரு நாட்களுக்குக் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாகவே அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது  

திறந்தவெளி சேமிப்புக் கிடங்கு

  இந்நிலையில் தொடர் மழை காரணமாகக் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் போதிய பாதுகாப்பின்றி, திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்படும் நெல் மூட்டைகள்  குடோன்களுக்கு  மாற்றம் செய்யாமல் இருந்து வந்த நிலையில், கட்டவாக்கம் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரத்துக்கும், மேற்பட்ட மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு இரண்டு மடங்கு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டது . இதன் காரணமாக தற்போது கட்டவாக்கம் பகுதியில் உள்ள கொள்முதல் நிலையத்தில் ஒரு மடங்கு கூடுதலாகச் சேமிப்பு வைக்கப்பட்டுள்ளது. நான்கு மாதங்களாகப்  பாதுகாப்பு கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. திறந்தவெளி சேமிப்பு கிடங்கு என்பதால், காற்று உள்ளிட்ட காரணங்களாக மேலே போற்றப்படும் , தார்ப்பாய் உள்ளிட்டவை கிழிந்து விடுகிறது. இதனால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகின்றன எனத் தெரிவித்தனர்.

அலட்சியத்தால் வீணான நெல் மூட்டைகள்

இதுகுறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில்,  நான்கு மாதங்களாக இங்கு நெல் மணிகள் சேர்த்து வைப்பதால், புயல் அல்லது மழை வந்தால் அதைப் பாதுகாக்க முடியாது.  மண்டல மேலாளருக்குக் கடிதத்தின் மூலம் பல முறை, சேமிப்புக் கிடங்கின் பொறுப்பாளர் கடிதம் எழுதியும், நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தான் இந்த நிலை ஏற்பட்டது என்று ஆதங்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.

தமிழ்நாடு விவசாயச் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் கே.நேருவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,  காஞ்சிபுரம், செங்கல்பட்டு  மாவட்டத்தில் இதேபோல 80 க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு போதிய அளவிலான சேமிப்பு கிடங்குகள் இல்லாத காரணத்தினால் , திறந்த வெளியிலேயே வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. முறையான பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால், இது போன்ற நிலை நீடிப்பதாகத் தெரிவித்தார். ஒன்றுபட்ட காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு அமைத்த நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஆங்காங்கே பாதுகாப்பின்றி அடுக்கி வைத்திருப்பதால் மழையில் நனைந்து சேதமைந்து வருவதுடன் நெல் முளைத்துவருகின்றது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல் மூட்டைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்றார்.

மேலும் அரசு அமைத்த நேரடி நெல் கொள் முதல் நிலையங்களிலும் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதில் காலதாமதம் செய்யப்படுவதால் விவசாயிகளும் தாங்கள் அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க முடியாமல் அவதி பட்டுவருகின்றனர். உடனடியாக விவசாயிகளிடமிருந்தும் நெல்லை கொள்முதல் செய்வதை வேகப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.