அரியலூர், ஜூலை 26 - தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கக் கோரி, அரியலூர் அண்ணாசிலை அருகே சிஐடியு, அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட சிமெண்ட் ஆலை மற்றும் சுரங்கத் தொழிலாளர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூரில் இயங்கி வரும் அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கும், ஆலையில் பணிபுரிந்து உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கும் வேலை வழங்க வேண்டும். பழைய ஆலையில் லோடிங் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு நிர்வாகி பி.தென்னரசு தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் எஸ்.ரெங்கராஜன் கண்டன உரையாற்றினார். மாவட்டத் தலைவர் கே.கிருஷ்ணன், மாவட்டச் செயலர் பி.துரைசாமி, துணைத் தலைவர் ஆர்.சிற்றம்பலம், சிமெண்ட் சங்க மாவட்டச் செயலர் ஏ.அருண்பாண்டியன் மற்றும் ஆலைக்கு நிலம் அளித்த விவசாயிகளின் வாரிசுகள் கலந்து கொண்டனர்.