அரியலூர், ஜூன் 25 - ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் அரியலூரைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழி லாளியின் மகன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் நேபாளத்தில் நடைபெற உள்ள ஆசிய போட்டிக்கு அவர் தகுதி பெற்றும், குடும்ப வறுமை காரணமாக அப்போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு மற்றும் தன்னார்வலர்கள் உதவி செய்ய வேண்டு மென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ள னர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அருள்மொழி கிராமத்தைச் சேர்ந்த வர் கொளஞ்சி-பைரவி தம்பதியரின் மகன் வெற்றிவேந்தன் (21). இவர் ஜெயங்கொண்டம் அரசு கலை கல்லூரியில் பி.காம் படித்து வரும் நிலையில், வெற்றி வேந்தனின் தந்தை கொளஞ்சி சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார்.
வெற்றிவேந்தன் சிறு வயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டு தடகளப் போட்டிக்கு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டார். இதற்காக இவரது வீட்டின் அருகில் உள்ள கொள்ளிட ஆற்றங்கரை மற்றும் சாலையோரங்களில் ஓடி தீவிர பயிற்சி மேற்கொண்டார். இதன் பயனாக மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் என பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்று சுமார் 20-க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அள விலான போட்டிகளில் கலந்து கொண்ட அவர், அங்கு நடைபெற்ற 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு 4 நிமிடங்களில் போட்டி தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும், நேபாளத்தில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாட வெற்றிவேந்தன் தகுதி பெற்றுள்ளார்.
ஆனாலும், நேபாளத்தில் நடைபெற உள்ள ஆசிய போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவாகும். குடும்ப வறுமை காரண மாக தற்போது ஆசிய போட்டியில் அவர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாதனை மாணவன் வெற்றி வேந்தனின் பெற்றோர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து தங்கம் வென்ற வெற்றி வேந்தன் தெரிவிக்கையில், “எனது தந்தை சுமை தூக்கும் தொழிலாளியாக இருக்கிற நிலையிலும், தன்னை வருத்திக்கொண்டு, தடகளப் போட்டியில் விளையாடுவதற்கு என்னை ஊக்கப்படுத்தினார். அதனால்தான், நான் தற்போது தேசிய அளவில் வெற்றி பெற்று, ஆசிய போட்டியில் விளையாடு வதற்கு தகுதி பெற்றுள்ளேன். ஆனாலும் குடும்ப வறுமை காரணமாக என்னால் அங்கு செல்ல முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆசிய போட்டியில் தங்கம் வென்று இந்திய ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்வதே எனது லட்சியம். ஆனால் வறுமையால் எனது கனவு நிறைவேறுமா? என எனக்கு தெரியவில்லை. அரசாங்கமோ அல்லது தன்னார்வலர்கள் யாரேனும் முன் வந்து, எனக்கு உதவி செய்தால் நிச்சயம் நேபாளத்தில் நடைபெற உள்ள ஆசிய போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன்” என்றார் கண்ணீருடன்.
வெற்றிவேந்தனின் கனவு நிறை வேறுமா? தமிழ்நாடு அரசு அல்லது தன்னார் வலர்கள் உதவிக்கரம் நீட்டுவார்களா?