districts

img

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5000 வழங்குக! சிஐடியு ஆர்ப்பாட்டம்

அரியலூர்/கரூர், அக்.7 - வீடு கட்டும் திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும். அனைத்துப் பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்களுக்கும் தீபாவளி பண்டிகை போனசாக ரூ.5000 வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பென்சன் தொகையை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 50 வயது கடந்த பெண் தொழிலாளர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும். அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் உபகரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் உள்ள அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர் நல அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் துரைசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டப் பொருளாளர் சிற்றம்பலம், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், துணைத் தலைவர்கள் சந்தானம், எஸ்.என்.துரைராஜ், சேப்பெருமாள், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஈபி ஆர்.கண்ணன், ஆரோக்கியநாதன், மாநிலக்குழு தனம், பொது தொழிலாளர் சங்கம் எஸ். மெய்யப்பன், உழைக்கும் பெண்கள் ஆதிலட்சுமி உட்பட 200-க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் 
கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் கரூர் மாவட்ட குழு சார்பில் கரூர் வெண்ணமலை தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ப.சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வி.கந்தசாமி வரவேற்றார். சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் சி.முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் எம்.தண்டபாணி, தையல் சங்க கௌரவ தலைவர் ஆர்.ஹோச்சுமின், மாவட்ட பொருளாளர் பி.ராஜீவ்காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.