districts

கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு-தனியார் பேருந்துகளை மீண்டும் இயக்குக! அமைச்சரிடம் சிபிஎம் மனு

அரியலூர், ஏப்.16 - அரியலூர் மாவட்டம் முழுவதும் ஏற்கனவே இயங்கி வந்த அதே வழித்தடங்களில் நிறுத்திய பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்து சிபிஎம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மனு அளித்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை ஊராட்சி மிகப்பெரியது. மேலும் ஊராட்சியில் உட்கோட்டை, தொட்டிகுளம், யுத்தபள்ளம், ஆயுதக்களம் (தெற்கு), (வடக்கு) கடாரங்கொண்டான் போன்ற கிராமங்கள் உள்ளன. இவை தவிர இடைக்கட்டு கிராமம் உள்ளது. இப்பகுதியில் பட்டு, பால் உற்பத்தி, விவசாயம் போன்ற தொழில்கள் செய்து வருகின்றனர். இங்கு அனைத்து கிராம தொடக்கப் பள்ளிகளிலும், உட்கோட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளியும் ஆரம்ப சுகாதார நிலைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதி மக்கள், கொரோனா காலத்திற்கு முன்பு அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் வந்து சென்றதால் அதனை பயன்படுத்தி வந்தனர். தற்போது கொரோனா காலம் முடிந்தும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவே முன்பு இப்பகுதியில் இயங்கி வந்த அனைத்து அரசு-தனியார் பேருந்துகளையும் அதே வழித்தடத்தில் மீண்டும் இயக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.

 இது தொடர்பாக செயலாளர் இளங்கோவன், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை மரியாதை நிமித்தமாக சந்தித்து, சால்வை அணிவித்து, அரியலூர் மாவட்டம் முழுவதும் ஏற்கனவே இயங்கிய பேருந்து வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கிடவும், புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கிடவும் கோரிக்கை மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.  நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், எ.கந்தசாமி, கே.கிருஷ்ணன்,  ஆண்டிமடம் வட்ட செயலாளர் வி.பரமசிவம், ஒன்றிய செயலாளர்கள் அரியலூர் துரை.அருணன், திருமானூர் ஆர்.புனிதன், தா.பழூர், ஜெ.ராதாகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் எம்.வெங்கடாசலம் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் என்.அருணாச்சலம், பிள்ளையாப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.