districts

மோடியின் தோல்வி தொடங்கி விட்டது

விழுப்புரம், டிச. 18 - வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் வெற்றியானது, 2024 மக்களவைத் தேர்தலில் மோடிக்கு தோல்வியை தரும என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட 23ஆவது மாநாடு சனிக்கிழமையன்று (டிச.18) எம்.சின்னப்பா நினைவரங்கில் (விழுப்புரம்) தொடங்கியது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து கே.பாலகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு: ஒவ்வொரு ஆண்டும் அம்பானி, அதானிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாயை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்கிறது. கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க மறுக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 7 ஆயிரத்து 500 கொடுக்க வற்புறுத்தி வருகிறோம். மக்களிடம் பணப்புழக்கம் இருந்தால்தான் மக்களை சாவிலிருந்து காப்பாற்ற முடியும். 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக 380 நாட்கள் போராடி, அரசின் அடக்குமுறைகளை முறியடித்து விவ சாயிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

விவ சாயிகளின் இந்த வெற்றியானது, 2024இல் நடைபெற உள்ள மக்களைத் தேர்தலில் மோடிக்கு தோல்வியை தரும். மோடியின் தோல்வி முகம் தொடங்கிவிட்டது. சாணிப்பால், சவுக்கடி என எதிர்ப்புகளை தாண்டி வளர்ந்தது செங்கொடி இயக்கம். அதேபோன்று இந்துத்துவா கொள்கையை எதிர்க்க வேண்டிய கடமையையும் செங்கொடி இயக்கத்திற்கு உள்ளது. தமிழகத்தில் தாமரை மலரும் என்றார்கள், ஆனால் கருகிக் கொண்டிருக்கிறது. ரவுடிகளை கட்சியில் சேர்த்து ரவுடியிசத்தை பாஜக கட்டவிழ்த்து விட்டுள்ளது. அதிமுக, பாமகவை வைத்து தனது நாடகத்தை அரங்கேற்ற பாஜக துடித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே, மதசார்பற்ற கட்சிகளின் ஒற்றுமையை பாதுகாக்கும் கடமை உள்ளது. அதை நிறைவேற்றுவோம்.

இவ்வாறு அவர் பேசினார். பொது மாநாட்டிற்கு செயற்குழு உறுப்பினர் பி.குமார் தலைமை தாங்கி னார், தோழர்கள் ஏ.தண்டபாணி, கே.அய்யப்பன் நினைவு கொடி, கொடி கம்பம் ஆகியவை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து செந்தொண்டர் அணிவகுப்புடன் மாநாட்டு அரங்கிற்கு கொண்டு வரப்பட்டது. அவற்றை செயற்குழு உறுப்பினர் ஆர்.மூர்த்தி பெற்றுக் கொண்டார். செயற்குழு உறுப்பினர் ஏ.கோதண்டம் செங்கொடியை ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.அறிவழகன் வாசித்தார். வரவேற்புக் குழு செயலாளர் ஆர்.கண்ணப்பன் வரவேற்றார். பிரதிநிதிகள் மாநாட்டில் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் வேலை, அமைப்பு அறிக்கையையும், செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்குமரன் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பிதனர்.

;