districts

மதுரை முக்கிய செய்திகள்

ஜூனியர் தடகள விளையாட்டு போட்டி: எஸ்பி பாலாஜி சரவணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி, செப். 12 தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான 18ஆவது ஜூனியர் தடகள விளையாட்டு போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட தடகள விளையாட்டு சங்கம் சார்பாக திங்களன்று தருவை மைதானத்தில் மாவட்ட அளவிலான 18ஆவது ஜூனியர் தடகள விளை யாட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஜூனியர் பிரிவில் 400 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டி யை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி துவக்கி வைத்து பேசினார். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட தடகள விளையாட்டு சங்கத்தின் சார்பாக சங்கத்தின் செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் அருள் சகாயம் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். இப் போட்டியில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்கா ணிப்பாளர் சத்தியராஜ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம், நகர உட்கோட்ட தனிப் பிரிவு உதவி ஆய்வளர் ஞானராஜன் உள்ளிட்ட காவல் துறையினர் மற்றும் பல பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

கல்லூரி மாணவர் தற்கொலை

தூத்துக்குடி, செப். 12 தூத்துக்குடி அருகே, கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மேல முடிமன் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் மகன் பிரவீன்குமார் (20). இவர் பசுவந்தனை அருகே நாகம்பட்டி யில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் மனோ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம். படித்து வந்தார். சனிக்கிழமை அவருடைய தாயார் பத்மா தேனியில் உள்ள பிரவீன்குமார் சகோதரி வீட்டிற்கு சென்று இருந்தார். பிரவீன் குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. வெகு நேரமாக வீடு பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அருகில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது பிரவீன்குமார் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்த னர். அவர்கள் விரைந்து வந்து பிரவீன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்து 3 வீடுகளின்  பூட்டை உடைத்து கொள்ளை

தூத்துக்குடி, செப். 12 கோவில்பட்டியில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் பின்புறம் உள்ள லெட்சுமி மில் மேலக்காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர் (61). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மகள் கோவையில் படித்து வருகிறார். தனது குடும்பத்துடன் கோவையில் படிக்கும் மகளை பார்க்க சென்று விட்டு ஞாயிறு நள்ளிரவு சந்திரசேகர் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின் பக்க கதவு, உள்ளே பீரோ மற்றும் அலமாரி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த ரூ. 10 ஆயிரம் பணம் மற்றும் விலை உயர்ந்த 3 வாட்ச் திருடு போனது தெரியவந்தது. 2 வெள்ளி குத்துவிளக்கு, வெள்ளி குங்கும சிமிழ் மற்றும் சில வெள்ளி பொருள்களை ஒரு பிளாஸ்டிக் பையில் எடுத்து வைத்து வாழை மரத்திற்கு அடியில் மறைத்து வைத்துள்ளனர். ஆனால் அதை எடுத்து செல்லவில்லை. இதேபோன்று மற்றொரு வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியூர் சென்றுள்ளதால் அங்கு என்ன திருடு போய் இருக்கிறது என்று தெரியவில்லை. அவர்கள் வந்த பிறகு தான் என்ன திருடு போய் இருக்கும் என்று தெரிய வரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இனாம் மணியாச்சி மேம்பால சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் பின்பகுதியில் வசிக்கும் விஜயக்குமார் (46). இவரும் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் ஞாயிறு நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளார். இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.54ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையம் பின்புறம் உள்ள வீடுகளில் நடைபெற்ற திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடன் - சிகிச்சைக்கு பணமில்லை: தாயுடன் தந்தை, மகள் தற்கொலை

நாகர்கோவில், செப்.12- தாயின் சிறுநீரக கோளாறுக்கு சிகிச்சை பெற பணம் இல்லாததாலும் கடன் பிரச்சனைகளாலும் தாய் தந்தையருடன் மகள் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருமனை அருகே சிதறால் வெள்ளாங்கோடு வாழை விளாகம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டுமான தொழிலாளியான கிருஷ்ணபிள்ளை (47). இவரது மனைவி ராஜேஸ்வரி (45). இவர்களது மகள் நித்யா (26). ராஜேஸ்வரி கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். மகள் நித்யாவிற்கும் கடன்களை வாங்கி சிரமப்பட்டு கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்தார். ஆனால் நித்யாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நித்யா கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கிருஷ்ணபிள்ளை, ராஜேஸ்வரி, நித்யா ஆகிய 3 பேரும் படுக்கை அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.  கிருஷ்ணபிள்ளை எழுதி வைத்திருந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் தனது மனைவியின் நகைகளை வீட்டின் அருகில் உள்ள ஒரு பெண்மணியின் பெயரில் அடகு வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த நகைகளை விற்று தங்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்றும் உடல்களை அவர்களுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்கு பிறகு கிருஷ்ணபிள்ளை, ராஜே ஸ்வரி, நித்யாவின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டன. ஒரே இடத்தில் அவர்களது உடல்கள் தகனம் செய்யப்பட்டன. தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடன் தொல்லை மற்றும் மனைவியின் உடல்நிலை பிரச்சனையால் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. ராஜேஸ்வரி சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் பணமின்றி அவதிப்பட்டுள்ளனர். நகைகளை அடகு வைத்து பணத்தை செலவு செய்து வந்துள்ளனர். மகளும் கணவரை விட்டு பிரிந்து வந்த வருத்தம் கிருஷ்ண பிள்ளைக்கு இருந்து வந்தது. இதனால் 3 பேரும் தற்கொலை செய்ய முடிவு செய்து இந்த விபரீத முடிவை எடுத்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அருமனை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

15 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல்- இருவர் கைது

மதுரை, செப்.12-  மதுரை திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி அருகே  கேரளாவிற்கு லாரியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை யினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து,  அப்பகுதியில்  சந்தேகத்திற்குரிய வகையில் வந்த லாரி யை நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டனர்.  அப்போது லாரியில் 300மூடைகளில் 50 கிலோ வீதம்  வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேசன் அரிசியை காவல்துறை யினர் கைப்பற்றி விசாரணை நடத்தினார். லாரியை ஓட்டி  வந்த கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியை  சேர்ந்த வில்சன், உதவியாளர் ஆசிஸ் ஆகியோரை கைது  செய்தனர். முக்கிய குற்றவாளிகளான கமுதியை சேர்ந்த  சசிக்குமார், கன்னியாகுமரியை சேர்ந்த வேலாயுதம் என்பவரும் தலைமறைவாக உள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை விபத்தில் மகன் பலி; தாய் படுகாயம்

கரூர், செப்.12 - கரூரை அடுத்த ஆத்தூர் பிரிவு ஜே.கே.பி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(33). இவரது மனைவி ரம்யா (29). இவர்களுக்கு இளவிழியன் (10) என்ற மகன் இருக்கிறார். மணிகண்டன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.திங்கள்கிழமை காலை 9 மணியளவில் ரம்யா தனது மகனை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டு உள்ளார். கரூர் - ஈரோடு நெடுஞ்சாலையில் கரூர் பாலிடெக்னிக் அருகில் சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது தனியார் ஜவுளி நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் பேருந்து, அச்சமயம் சாலையை கடக்க காத்திருந்த ரம்யாவின் இருசக்கர வாகனத்தில், அந்தப் பேருந்து இடித்ததில், தலையில் படுகாயமடைந்த 5 ஆம்  வகுப்புமாணவன் இளவிழியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  படுகாயமடைந்த ரம்யா தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் காவல் நிலைய போலீசார், இளவிழியனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பி ஓடிய தனியார் ஜவுளி நிறுவன பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர். 

ஓட்டலில் கள்ள நோட்டு மாற்றிய 4 பேர் கைது 

திருநெல்வேலி, செப் .12 பாளையங்கோட்டை ஓட்டலில் கள்ள ரூபாய் நோட்டு மாற்றிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகர் பகுதியில் உள்ள ஒரு புரோட்டா கடைக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிலர் சாப்பிட வந்தனர். அவர்கள் சாப்பிட்டு விட்டு 500 ரூபாய் நோட்டை கொடுத்து உள்ளனர். அதை பரிசோதனை செய்த ஓட்டல் நிர்வாகி, 500 ரூபாய் கள்ள நோட்டு என்பதை அறிந்தார். இதுகுறித்து ஓட்டல் நிர்வாகி பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ள நோட்டு கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் கள்ள ரூபாய் நோட்டு கொடுத்தாக வீரவநல்லூரைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (வயது 24), மேலப்பாளையத்தை சேர்ந்த இர்பான் (30), கே.டி.சி.நகரைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (34) மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோரை ஞாயிறன்று மாலை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு புறம்போக்கு அபகரிப்பு முயற்சி: மூன்று பேர் கைது

சின்னாசுளபட்டி, செப்.12- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி சேர்ந்தவர் ராணி  (60) இவரது மகன்  விஜய பாஸ்கர் (32) இவர்கள் நிலக்கோட்டையில் இருந்து அணைப்பட்டி செல்லும் சாலையில் தனியார் பள்ளி அருகே சுமார் 12-ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.  இந்த நிலத்தில்தான் நிலக்கோட்டை நீதிமன்ற புதிய கட்டடம் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் அந்த இடத்தை ராணியும் அவரது மகன் விஜயபாஸ்கரும் சேர்ந்து குறுக்குவழியில் அபகரிக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.  இதுகுறித்து நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் வருவாய் ஆய்வாளர் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில்  காவல்துறையினர் விசாரணை நடத்தி  அரசு புறம்போக்கு நிலம் 12 ஏக்கரை அபகரிக்க முயற்சி செய்த தாய் ராணி மீதும் மற்றும் மகன் ராஜசேகர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து நிலக்கோட்டை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

சவூதியில் முசிறி தொழிலாளி மர்ம சாவு உடலை மீட்டு வரக் கோரி மனைவி மனு

திருச்சிராப்பள்ளி, செப்.12 - திருச்சி மாவட்டம் முசிறி சித்தாம்பூர் காவேரிபாளையம் குடித்தெரு பகுதியைச் சேர்ந்தவர் புரவியான் (48). இவர் கடந்த சில ஆண்டுகளாக அரபு நாடுகளில் வெல்டிங் வேலை செய்து வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சவூதிஅரேபியா சென்ற அவர், அங் குள்ள உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி அவர் வேலை பார்த்த கம்பெனி யிலிருந்து ஒரு ஊழியர் புரவியா னின் மனைவி அன்னக்கிளிக்கு தொடர்பு கொண்டு, உங்களது கணவர் மாயமாகிவிட்டதாக தெரி வித்தார். பின்னர் ஞாயிறன்று காலை உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர். பின்னர் நள்ளிரவில் புரவியான் சிகிச்சை பலனின்றி இறந்து விட்ட தாக தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து திங்களன்று இறந்த தொழிலாளியின் மனைவி அன்னக்கிளி, மகள் நிவேதாவுடன் ஆட்சியர் பிரதீப் குமாரை சந்தித்து, கோரிக்கை மனு ஒன்றை அளித் தார். அதில், “என் கணவர் சாவில் முன்னுக்குப் பின் முரணான தகவல் கள் அளிக்கப்பட்டுள்ளன.  கணவர் உடலை மீட்டுத் தந்து எங்கள் வாழ்வா தாரத்துக்கு வழி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இன்சூரன்ஸ் முகவர்களின் கமிசன் குறைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, செப்.12 - இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தின் இன்சூரன்ஸ் முகவர்கள் கமிசன் குறைப்பு முன்மொழிவை கண்டித்து அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி கண்டோன்மெண்ட் எல்ஐசி கிளையில் தலைவர் மார்ட்டின் டேனியல் ஜெயக்குமார், ஸ்ரீரங்கம் கிளையில் தலைவர் கோபால், திருச்சி யூனிட் 1ல் ராஜசேகர், திருவெறும்பூர் கிளையில் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி கோட்டத்தலைவர் பொன்.வேலுச்சாமி, கோட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், கோட்ட துணைச் செயலாளர் இந்திராணி ஆகியோர் பேசினர். அரியலூர் அரியலூர், ஜெயங்கொண்டம் எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் அரியலூர் எல்ஐசி அலுவலகம் முன்பு கிளை தலைவர் ஆறுமுகம் மற்றும் ஜெயங்கொண்டம் நீலமேகம் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் என்.ராஜா, சிஐடியு மாநில மாவட்ட செயலாளர் பி.துரைசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

மதுரை மாநாட்டு மையத்தில்  செப்.23 முதல் புத்தகக் கண்காட்சி துவக்கம் குழந்தைகளுக்காக கதை சொல்லல் அரங்கம்  

மதுரை, செப்.11- மதுரை தமுக்கம் மைதானத்தில்  உள்ள  “மதுரை மாநாட்டு மையத்தில்”  மாபெரும்  புத்தக கண்காட்சி வருகின்ற செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி  முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். கூடல் மாமதுரையில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய புத்தக  பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக வருடந்  தோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புத்தக வாசிப்பை ஒரு மக்கள்  இயக்கமாக எடுத்துச்செல்ல உத்தரவிட்ட தன் பேரில், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருகின்ற செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை அனைத்து நாட்களிலும் மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள  ”மதுரை மாநாட்டு மையத்தில்” மாபெரும் புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.  இதில்  புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையா ளர்கள் சார்பாக  200-க்கும் மேற்பட்ட புத்தக அங்காடிகள் அமைக்கப்படவுள்ளது.   இப்புத்தகக் கண்காட்சியில் சிறப்பு அம்சமாக குழந்தைகளுக்கான கதை சொல்லல், பயிலரங்கம் போன்ற நிகழ்வு களைக் கொண்ட சிறார் அரங்கமும், கல்  லூரி மாணவ, மாணவியர் மற்றும் விருப்ப முள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளும் கவிதை, கட்டுரை, பேச்சு, புனைவு, நாட கம், சினிமா, தொல்லியல் மற்றும் நுண் கலை தொடர்பான பயிலரங்கங்கள் சிறந்த வல்லுநர்களைக்கொண்டு நடத்தப்படவுள் ளது.  தினந்தோறும் மாலை வேளையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவி யரின் கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர பேச்சா ளர்களின் உரை வீச்சுகள் மற்றும் பட்டி மன்றங்கள் நடைபெற உள்ளன.  எனவே, வாசிப்பை ஒரு மக்கள் இயக்க மாக மாற்றும் பொருட்டு இப்புத்தக கண்  காட்சியில் சிறார்கள், மாணவ, மாணவி யர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
 

;