மயிலாடுதுறை, டிச.15 - மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பட்டவர்த்தி பகுதியில் கடந்த டிச.6 ஆம் தேதி புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சியில் ஒரு தரப்பினர் தாக்குதல் நடத்தினர். ஆனால் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மீதே வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கு பதிலாக, சேலம் மேட்டூரில் வேலை செய்து வந்த ஆனந்தராஜ், சங்கர் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் திடீரென ஊரில் ஏற்பட்ட இறப்பு நிகழ்வுக்கு வந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு விசாரணைக்கு என கூறி காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இந்நிலையில் ஒருநாள் கடந்த பின்னரும் இருவரும் வீடு திரும்பாததால் குடும்பத்தினரும், ஊர் மக்களும் தேடி அலைந்த தகவல் அப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் ஜி.மகேந்திரனுக்கு தெரிய வர, அவர், அனைவரையும் அழைத்து கொண்டு மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவலகத்திற்கு வந்து தகவல் கூறினார். இதையடுத்து,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ஏவி.சிங்காரவேலன், ப.மாரியப்பன், டி.சிம்சன், அ.ரவிச்சந்திரன், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி, நகர செயலாளர் தே.துரைக்கண்ணு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி.மேகநாதன், கே.பி.மார்க்ஸ், அ.அமுல்காஸ்ட்ரோ, ரெ.ரவீந்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட பொருளாளர் விஜய் மற்றும் நகர, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் காவல்நிலையம் சென்ற போது இருவர் மீதும் பொய் புகார் பதிந்து, காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல முயன்றது தெரியவந்தது. பின்னர் வாகனத்தில் ஏற்றி புறப்பட்டதை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சம்பந்தப்பட்ட இருவரையும் உடனடியாக விடுவிப்பதாக ஒப்புக்கொண்டு விடுவித்தனர். இறுதியாக சம்பந்தப்பட்டவர்களும், அவர்களது குடும்பத்தினரும், ஊர் பொதுமக்களும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் வந்து உணர்ச்சியுடன் நன்றி தெரிவித்து சென்றனர்.