புதுக்கோட்டை, ஜூன் 22 - குற்றவாளிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையே திட்டமிட்டு சாதிய மோதலை உருவாக்குகிறதா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை, கறம்பக்குடியை அடுத்த கருக்காக்குறிச்சி ராஜா குடியிருப்பைச் சேர்ந்த தர்மராஜ் என்பவன் கடந்த ஜூன் 14 ஆம் தேதி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான். அவனிடமிருந்து தப்பி வந்த மாணவி உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து வடகாடு காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத தர்மராஜ் தரப்பினர், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட 14 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து கொலைவெறியுடன் தாக்கியுள்ளனர். இதில் இதில் படுகாயமடைந்த 5 பேர் தற்போது வரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நடந்துள்ள சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த ஜூன் 17 ஆம் தேதி வடகாடு காவல்நிலையம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதா குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆனாலும் சிலரை மட்டும் கைது செய்துவிட்டு முக்கிய குற்றவாளியான குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் காவல்துறையினர் கைது செய்யவில்லை.
காவல் துறையினரின் இத்தகைய பாரபட்சமான நடவடிக்கையைக் கண்டித்து சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ(எம்எல்) ஆகிய கட்சிகளின் சார்பில் புதன்கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடியிருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாவாணன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஐ(எம்எல்) கட்சி மாவட்டச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செயலாளர் தெ.கலைமுரசு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன், த.அன்பழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா, செயலாளர் டி.சலோமி, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சிபிஎம் எச்சரிக்கை
போராட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் பேசுகையில், “மாவட்டம் முழுவதும் தீண்டாமைக் கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. தமிழகத்திலேயே தீண்டாமை வடிவங்கள் அதிகம் உள்ள மாவட்டமாக புதுக்கோட்டை உள்ளது. தலித் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய காவல்துறை அதற்கு நேர்மாறாக செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட தலித் மக்கள் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதில்லை. தொடர்ச்சியான தலையீட்டிற்குப் பிறகு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டாலும், குற்றவாளிகளை கைது செய்வதில்லை. மாறாக அவர்களிடம் கவுண்டர் பெட்டிசனை பெற்றுக் கொண்டு கட்டப் பஞ்சாயத்து பேசும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபடுகின்றனர். இங்கு பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் புகார் தெரிவித்ததும் நடவடிக்கை எடுத்து இருந்தால், இந்தப் பிரச்சனை அந்த நபரோடு முடிந்திருக்கும். அவ்வாறு செய்யாமல் குற்றவாளி சாதி ரீதியாக அணி திரளுவதற்கான வாய்ப்பை காவல்துறையினரே ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். மேலும், அந்த மாணவியை வேறு நபரோடு தவறாக சித்தரித்து நோட்டீஸ் வெளியிடுவதும் அளவிற்கு ஒரு சாதி சங்கமே இறங்கி இருக்கிறது. இத்தகைய இழிசெயல் நடப்பதற்கு காவல்துறையினரே உடந்தையாக இருந்துள்ளனரோ என்று சந்தேகப்படும் அளவுக்கு காவல்துறையினரின் நடவடிக்கை உள்ளது.
விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனவே, குற்றவாளிக்கு துணை போகும் வடகாடு காவல் ஆய்வாளர், ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை உடனடியாக பணியிட மாறுதல் செய்ய வேண்டும். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து, நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். காவல்துறையினரின் பாரபட்சமான நடவடிக்கை தொடர்ந்தால் மாநில அளவிலான போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செல்லும்” என தெரிவித்தார். போராட்டத்தைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் தலைமையில், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில், நடந்துள்ள சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் அனைவரும் விரைந்து கைது செய்யப்படுவர். கோட்டாட்சியர் தலைமையில் விசாரணைக் கமிசன் அமைத்து சம்பவம் நடந்துள்ள பகுதியில் ஆய்வு செய்யப்படும். தலித் மக்களின் குடியிருப்புகளுக்கு உரிய பாதுகாப்பும் அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.