districts

img

திருப்பூரில் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் போலீசும், பாஜகவும் இணைந்து நடத்திய கள்ள நாடகம்

திருப்பூரில் அனுமதி இல்லாமல் பாரதிய ஜனதா கட்சி வேல் யாத்திரை பொதுக் கூட்டம் நடத்தியதில் அதிமுக அரசின் காவல் துறையும், பாரதிய ஜனதா கட்சியும் கூட்டாக சேர்ந்து, சட்டத்தை கேலிக்கூத்தாக்கும் கள்ள நாடகத்தை கச்சிதமாக அரங்கேற்றினர். பாஜகவினர் மக்களின் மத உணர்வைத் தூண்டி சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், கொரோனா பரவல் தடுப்பு விதி முறையை காற்றில் பறக்கவிட்டும் வேல் யாத்திரை பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். ஆரம்பத்திலேயே இதற்கு மதசார்பற்ற, ஜன நாயகக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில், மாநில அரசும் நீதிமன்றத்தில், இந்த யாத்திரைக்கு அனுமதி இல்லை என மறுப்புத் தெரிவித்தது. அரசின் அனுமதி மறுப்புக்குப் பிறகும் பாஜக வின் வேல் யாத்திரை தொடங்குவது பற்றி முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியிடம் கேட்ட போது, “சட்டம் தன் கடமையைச் செய்யும்!” என்றார். எனினும் பல ஊர்களில் தொடர்ந்து இந்நிகழ்ச்சி நடந்து வந்தது. திருப்பூரில் இந்நிகழ்ச்சியை நடத்தியதில், சட்டம் தன் கட மையைச் செய்த அனுபவம் ருசிகரமாக இருந்தது! திருப்பூரில் நவ.22 ஞாயிற்றுக்கிழமை வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடக்கும் என பாஜகவினர் விளம்பரப்படுத்தி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். நகரெங்கும் விளம்பரங்கள், கொடிகள் கட்டி, வாகனங்கள் வைத்து ஆட்களைக் கூட்டி வரும் வேலையில் ஈடுபட்டனர். ஆனால், அப்போதெல்லாம் காவல் துறையினர் அவர்களை எந்தத் தொந்த ரவும் செய்யவில்லை, மாறாக, வழி நெடுக காவ லர்களை நிறுத்தி அந்த நிகழ்ச்சிக்கு பாது காப்பு ஏற்பாடுகளை பலமாகச் செய்திருந்தனர்.

பல்லடம் சாலையில் தனியார் திடலில் பொதுக்கூட்ட மேடை அமைத்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மாலை யில் இந்த நிகழ்ச்சிக்கு பொன்.ராதா கிருஷ்ணன், நடிகை குஷ்பு ஆகியோர் வந்த னர். அவர்கள் வரும் வரை கலை நிகழ்ச்சி, கும்மி பாட்டு, உள்ளூர் தலைவர்கள் பேச்சு என எவ்வித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. அது வரை அமைதி காத்த மாநகரக் காவல் துறையினர், பொன்.ராதா கிருஷ்ணன், குஷ்பு வந்தவுடன் துடிப்புடன் தங்கள் கடமையைச் செய்யத் தொடங்கினர். அவர்களிடம் சென்று நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதைக் கூறி ஏதோ பேசினர். உடனே அவர்களும் “சட்டத்தை மதித்து” மேடை ஏறாமல் கீழேயே இருக்கை போட்டு அமர்ந்தனர். இதன் பிறகு ஒரு ஆட்டோ வாக னத்தை வரவழைத்து, மேடைக்கு முன்பாக அதை நிறுத்தி அதில் அவர்கள் ஏறி நின்று நிகழ்ச்சியைத் தொடர்ந்தனர். அப்போது பேசிய உள்ளூர் நிர்வாகிகள், கூடியிருந்த கூட்டத்தினரி டம், “இதுவரை நாம் மேடையில் எந்த நிகழ்ச்சியும் நடத்தவில்லை, இப்போது தான் நிகழ்ச்சி தொடங்குகிறது!” என பச்சை பொய்யை..இல்லை இல்லை.. காவிப் பொய்யை கூச்சமில்லாமல் அவிழ்த்து விட்டனர். அதையும் அங்கிருந்த காவல் துறை யினர் கடமை உணர்வோடு கேட்டு ரசித்துக் கொண்டிருந்தனர். அதன்பிறகு மைக்கைப் பிடித்த பொன்ராதா தாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள் என்றும், காவல் துறை மேடை ஏறினால் கைது செய் வோம் என்றதால் கீழேயே ஆட்டோவில் நின்று பேசுவதாகவும் பெருமை பொங்கக் கூறிக் கொண்டார். கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசி முடித்ததும், பெரும்பாலான கூட்டம் கலைந்து சென்றது.

சாராயத்துக்கும், பிரியாணிக்கும் கூட்டி வந்த கூட்டம் இல்லை என்று அவர் கள் முழங்கிக் கொண்டிருக்க, மைதானத்தில் சாராய நெடியுடன் பல தாமரை சொந்தங்கள் தள்ளாடிக் கொண்டிருந்தனர். கம்பெனிகளில் இருந்து கூட்டி வந்த வடமாநிலத் தொழி லாளர்கள் பலர் என்ன நடக்கிறதென்று தெரி யாமல் கூட்டத்தில் அமர்ந்து திருதிருவென முழித்துக் கொண்டிருந்தனர். செய்தியாளர் ஒருவர் அவர்களை அணுகி, முருக கடவு ளைத் தெரியுமா, கந்த சஷ்டி தெரியுமா எனக் கேட்க அவர்கள் அவரை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக பாஜக திட்டமிட்ட நிகழ்ச்சி நடந்து முடிந்தவுடன், காவல் துறையினர் பொன் ராதாவையும், குஷ்புவையும் கைது செய்வ தாக சட்டப்படி தங்கள் கடமை ஆற்றினர். சுமார் ஒரு மணி நேரம் பக்கத்தில் ஒரு மண்டபத்தில் அமர வைத்து அவர்களை இளைப்பாற வைத்து, களைப்பு தீர்ந்த பின்னர் வழி அனுப்பி வைத்த னர். இப்படியாக அதிமுக அரசின் முதல்வர் அறி வித்தபடி, “சட்டம் தன் கடமையைச் செய்தது!” காவல் துறையினர் முதல்வரின் குறிப்பறிந்து செம்மையாக அதை நிறைவேற்றி வைத்தனர். ஆனால் அதே நாளில் காலை, பெரியார் உணர்வாளர்கள், நீதிமன்ற உத்தரவை அவ மதித்து, தடையை மீறி பாஜக வேல் யாத்திரை நடத்துவதை அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியரகம் அருகே பெரியார் தடி ஊர்வலம் நடத்தினர்.

அதற்கு அனுமதி மறுத்த காவல் துறையினர் அதில் பங்கேற்ற பெரி யார் உணர்வாளர்களை துரத்தி, துரத்திக் கைது செய்தனர். அனுமதி மறுத்த இருவேறு சம்பவங்களில் முதல்வர் கட்டுப்பாட்டில் இருக் கும் காவல் துறையின் இருவேறு அணுகு முறைகள் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கி, பாஜக வுடன் சேர்ந்து கொண்டு கள்ள நாடகத்தை அரங்கேற்றியதை வெட்ட வெளிச்சமாக்கியது! ஆனால் அதைவிட கொடுமை என்ன வென்றால், உண்மையை உரக்கச் சொல்லும் முன்னணி தமிழ் நாளிதழ்களை மறுநாள் காலை விரித்துப் பார்த்தபோது, “திருப்பூரில் பொன். ராதாகிருஷ்ணன், குஷ்பு கைது!” என கொட்டை எழுத்துக்களில் செய்தியைப் போட்டிருந்தன! இப்படித்தான் அவர்கள் மக்களுக்கு உண் மையை விளக்கிக் கொண்டிருக்கின்றனர்.

வே.தூயவன்

;