districts

மாத்தூர் பாசன வாய்க்கால் தூர்வாரப்படுமா

கும்பகோணம்,  ஜூலை 5-

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திப்புராஜபுரம், மேலமாத்தூர், மாத்தூர், செறுகுடி, வேலங்குடி, கூகூர் வரை சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன.  

   இந்நிலங்களுக்கு பாசன வாய்க்காலான மாத்தூர் பெரிய வாய்க்கால் வழியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு, அப்பகுதி விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தயாராக உள்ளனர்.  

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டபோதிலும், மாத்தூர் பெரிய வாய்க்காலை இதுவரை தூர்வாராததால், கோரை புதர்கள் மண்டி தண்ணீர் வராத அளவிற்கு தூர்ந்து போய் உள்ளது. உடனடியாக இந்த மாத்தூர் பெரிய வாய்க்காலை தூர்வாரி அப்பகுதி விவசாயிகளுக்கு உதவிட வேண்டும்.

    மாத்தூரில் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கு, செம்மங்குடி, கிளைக்காட்டிருப்பு, வண்டுவாஞ்சேரி, பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் நடந்து வருகின்றனர். இந்த பெரிய வாய்க்காலை தூர்வாரும் போது, ஒரு வரப்பை அகலப்படுத்தி நடைபாதையாக அமைத்து கொடுத்தால், குழந்தைகள் எளிதாக பள்ளிக்குச் செல்ல வழிகிடைக்கும்.  

  இப்பகுதி முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு நடைபாதையே இல்லாமல் உள்ளது. ஆகையால் இந்த பெரிய வாய்க்காலை தூர்வாரித் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியக் குழு கோரியுள்ளது.