districts

img

கரூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயில கல்விக்கடன் வழங்க ரூ.24 கோடி இலக்கு

கரூர்,மே 13- 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுச் செல்லும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரி கனவு" நிகழ்ச்சியானது கரூர் கொங்கு கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் தலைமையில் மே 13 அன்று நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், இத்தகைய வழிகாட்டல் நிகழ்ச்சிகள் மாணவ-மாணவியர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். மேலும், தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும்.  அந்த வகையில் இன்றையதினம் கரூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 58 அரசு பள்ளிகளில் இருந்து 4,000 மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு வங்கிகள் மூலம் மாணவ- மாணவியர்களுக்கு உயர்கல்வி பயில கல்விக் கடன் வழங்க ரூ.24 கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மாணவ, மாணவியர்கள் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமாக விளங்கும் உயர்கல்வி படிப்பிற்கான இச்சிறப்பு வழிகாட்டி நிகழ்ச்சியினை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். .  இந்நிகழ்ச்சியில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.கி.பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி,, துறை வல்லுநர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

;