திருவாரூர், டிச. 8 - வாடகைக் கட்டிடங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களை அரசு கட்டிடங்களில் அமைத்திட தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டிடங்களில் உள்ள பழுதுகளை நீக்கம் செய்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். காலமுறை ஊதியம், வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையத்திற்கு வழங்கப்பட்ட கைப்பேசிகளை செயல்பட வைக்க வேண்டும். பதிவேடுகள் அனைத்தும் அரசால் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் செவ்வாய்க்கிழமை இரவு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பெருந்திரள் முறையீடு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் அ.பிரேமா தலைமையேற்றார். சிஐடியு மாவட்ட தலைவர் இரா.மாலதி, செயலாளர் டி.முருகையன் போராட்டத்தை ஆதரித்து உரையாற்றினர். சங்க மாவட்டச் செயலாளர் வி.தவமணி, மாவட்ட பொருளாளர் டி.மாலதி உட்பட 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.