districts

3 மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, டிச.6-  குமரி  மாவட்டம்  தேரூர் பகுதியை சேர்ந்த வன ஊழியர்  ஆறுமுகம்,  அவரது  மனைவி யோகேஸ்வரி ஆகிய இருவரையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த  வழக்கை விசாரிக்கும் நாகர்கோவில்  சிபிசிஐடி காவல்துறை  3 மாதத்திற்குள்  குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரியை சேர்ந்த செலஸ்டின் என்பவர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கன்னியாகுமரி  தேரூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் வன ஊழியர். இவரது மனைவி யோகேஸ்வரி. கணவன்,- மனைவி இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு  மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர் .அப்போது தேரூர் பகுதியில் மர்ம நபர்கள்,2 பேரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.  இதுதொடர்பாக சுசீந்திரம் காவல்துறையினர்  14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் 14 பேரும்  கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை  சி.பி.சி.ஐ.டி. காவல்துறை யினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் 12 ஆண்டுகள் ஆகியும் இது வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வில்லை. எனவே இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர்  விசாரணையில் இருந்து, சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.  இந்த மனு மீதான விசாரணை  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபூர்வாலா மற்றும்  நீதிபதி விக்டோரியா கௌவுரி அமர்வு முன்பு செவ்வாயன்று நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,இந்த வழக்கை விசாரிக்கும் நாகர்கோவில் சிபிசிஐடி காவல்துறை 3 மாதத்திற்குள் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இல்லையேல் மனுதாரர் சட்டபடி உரிய நடவடிக்கை தொடரலாம் என்று  உத்தரவிட்டனர்.