தஞ்சாவூர், மே 13 - தஞ்சாவூர் மானோஜிப்பட்டி புது ஆற்றங்கரையில் வெள்ளிக்கிழமை காலை, சுமார் மூன்று வயது மதிக்கத் தக்க ஒரு ஆண் குழந்தை தனியே நின்று கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக நடைபயிற்சி செய்து கொண்டிருந்த ஒரு நபர், இது குறித்து சைல்டு லைன் எண் 1098-க்கு அலை பேசி மூலம் தகவல் அளித்தார். இதனையடுத்து அங்கு சென்ற சைல்டு லைன் குழு உறுப்பினர்கள், குழந்தையை மீட்டு, தஞ்சாவூர் மேம்பாலம் அருகில் உள்ள குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தனர். அந்த குழந்தை அங்கு எப்படி வந்தது. யார் விட்டுச் சென்றனர். எவரேனும் கடத்தி வந்தனரா எனத் தெரிய வில்லை. மீட்கப்பட்ட குழந்தைக்கு தனது பெயர், முகவரி அடையாளம் ஏதும் சொல்லத் தெரியவில்லை. சிகப்பு கலந்த சிமெண்ட் கலர் பனியன், முக்கால் கால்சட்டை அணிந்து இருந்தான். வலது கை தோள்பட்டைக்கு கீழ் தழும்பு இருந்தது. உயரம் சுமார் இரண்டே முக்கால் அடி உயரத்துடன் நல்ல நிலையில் இருந்தது. குழந்தை பற்றி தகவல் அறிந்தவர்கள் சைல்டு லைன் அமைப்பின் 1098 என்ற எண்ணிற்கு அல்லது மாவட்ட குழந்தை கள் நல பாதுகாப்பு அலகு 04362-237014, குழந்தைகள் நலக்குழு 04362-237012 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரி விக்கலாம் என கூறப்பட்டுள்ளது.