districts

தமிழ் வளர்ச்சித் துறை நடத்தும் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

தஞ்சாவூர், ஆக.28 -  தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்தநாள் அன்று, மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.  இதன்படி தஞ்சை மாவட்டத்தில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 15 (வியாழக்கிழமை) அன்றும், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 17 (சனிக்கிழமை) அன்றும், தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியாக பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.  இப்போட்டியில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 வழங்கப்பட உள்ளது. இதுமட்டுமின்றி பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுள், அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகை ரூ.2,000 வீதம் வழங்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான போட்டி செப்.15 காலை 9 மணிக்கு தொடங்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கான போட்டி செப்.17 பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கப்படும்.  பள்ளி மாணவருக்கான பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள் (அறிஞர் அண்ணா பேச்சுப்போட்டி): 1. தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன், 2. மாணவருக்கு அண்ணா, 3.அண்ணாவின் மேடைத் தமிழ், 4. அண்ணா வழியில் அயராது உழைப்போம்.  (தந்தை பெரியார் பேச்சுப்போட்டி தலைப்பு) 1. தொண்டு செய்து பழுத்த பழம், 2. தந்தை பெரியாரும் தமிழ் சமுதாயமும், 3. தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள், 4. தந்தை பெரியார் காண விரும்பிய உலக சமுதாயம், 5. தந்தை பெரியாரும் பெண் விடுதலையும். கல்லூரி மாணவருக்கான பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள் (அறிஞர் அண்ணா பேச்சுப் போட்டி): 1. பேரறிஞர் அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், 2. பேரறிஞர் அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள், 3. அண்ணாவின் தமிழ் வளம், 4. அண்ணாவின் அடிச்சுவட்டில், 5.தம்பி மக்களிடம் செல், (தந்தை பெரியார் பேச்சுப்போட்டி தலைப்பு) - 1. தந்தை பெரியாரும் பெண் விடுதலையும் 2. தந்தை பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், 3. பெண் ஏன் அடிமையானாள்?  4.இனி வரும் உலகம் 5. சமுதாய விஞ்ஞானி பெரியார், 6. உலக சிந்தனையாளர்களும் பெரியாரும். தஞ்சாவூர் மாவட்ட பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்று இப்பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டுக் கொண்டுள்ளார்.