அரியலூர், செப்.8 - தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவிலைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சாமிநாதன், மாரியப்பன் என இரண்டு மகன்களும், தையல்நாயகி என்ற ஒரு மகளும் உள்ளனர். மகள் தையல்நாயகிக்கு அரியலூர் மாவட்டம் அணைக்குடம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய சாமிநாதன், தனது தங்கையின் திருமணத்திற்காக அரியலூர் வந்திருந்தார். அப்போது மண்டபத்திற்கு அருகே இருந்த பெட்டி கடைக்கு வந்துள்ளார். அச்சமயம், இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் சாமிநாதனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் நாற்காலியில் அமர்ந்திருந்த சாமிநாதன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கலைக்கதிரவன், உயிரிழந்த சாமிநாதனின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். முன் விரோதம் இருந்த நிலையில் இந்த கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கைரேகை நிபுணர்கள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரியலூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில், டிஎஸ்பி கலைக்கதிரவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பெயரில் போலீசார் 3 பேரை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.