இளம்பிள்ளை, டிச.15
சாக்கடை கால்வாயை கையுறையின்றி தூர்வாரிய துப்புரவு பணியாளர்கள் முறையான உபகரணங்கள் வழங்கவில்லை என குற்றச்சாட்டு
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவில் அருகில் இளம்பிள்ளை - காக்காபாளையம் பிரதான சாலையின் குறுக்கே கழிவுநீர் கால்வாய் செல்கிறது.
இப்பகுதியில் அடிக்கடி கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு சாலையின் குறுக்கே தண்ணீர் சென்று வருகிறது.
இதனை சரிசெய்ய இன்று (புதன்கிழமை) இளம்பிள்ளை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் 2 பேர் கழிவுநீர் கால்வாயில் இறங்கி தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேரும் கையுறை, பாதுகாப்பு கவசம் எதுவும் அணியாமல் ஆபத்தான முறையில் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சாக்கடை கால்வாயில் மனித கழிவுகளும் மிதந்து வந்தன. அதையும் பொருட்படுத்தாமல் வெறும் கையாலே அகற்றினர்.
துப்புரவு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கையுறை, பாதுகாப்பு உடை அணிந்து பணி செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. இருப்பினும் ஊழியர்கள் கையுறை, பாதுகாப்பு உடை அணியாமல் கழிவுகளை அகற்றியது வேதனை அடைய செய்துள்ளது.
இது குறித்து விசாரணையில் தூய்மை பணியாளர்களுக்கு முறையான உபகரணங்கள் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடிக்கடி அடைப்பு வருகின்றன. இதனை தடுக்க பெரிய கால்வாய் அமைக்க பேரூராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.