districts

சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை, ஜூம் 3- சென்னையில் அடையாறு, மத்திய கைலாஷ், அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பு ஆகிய பகுதிகளில் தற்காலிக போக்குவரத்து மாற்றத்தை சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வாகன போக்குவரத்தில் மாற்றங்கள் சோதனை அடிப்படையில் சனிக்கிழமை (ஜூன் 4) முதல் 10 நாட்க ளுக்கு அமல்படுத்தப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. பழைய மகாபலிபுரம் சாலை இந்திரா  நகர் சந்திப்பு வழியாக அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள் ஜூன் 4 முதல் ஓ.எம்.ஆர் சர்வீஸ் சாலை வழியாக (மத்திய கைலாஷ் பின்புறம்) இடதுபுறம் திரும்பி சர்தார் பட்டேல் சாலையை அடைந்து காந்தி மண்டபம் மேம்பாலத்தின் கீழ் யூடர்ன் திரும்பி மீண்டும் சர்தார் பட்டேல் சாலை வழியாக சி.பி.டி சந்திப்பை அடைந்து அவரவர் இலக்கை அடையலாம் அல்லது பழைய மகாபலிபுரம் சாலை யிலிருந்து அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள் இந்திரா நகர்  சிக்னலில் வலது புறம் திரும்பி இந்திரா  நகர் 2ஆவது அவின்யூ (வாட்டர் டேங்க்  சாலை) இந்திரா நகர் 1ஆவது அவின்யூ  சந்திப்பு வழியாக எல்.பி. ரோட்டை அடையலாம்.

சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் முயற்சியாக ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் இடது பக்கம் திரும்பி பட்டுலாஸ் சாலை  வழியாக ஒயிட்ஸ் சாலை செல்லலாம். ஒயிட்ஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை வழியாக அண்ணாசாலை அடையலாம்.  ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து வரும்  வாகனங்கள் ஸ்மித் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலையை அடையலாம் மற்றும் டவர் கிளாக் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை வழியாக அண்ணாசாலையை அடைய அனுமதிக்கப்படும். ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் பட்டுலாஸ் சாலையில் இருந்து  வரும் வாகனங்கள் ஸ்மித் ரோட்டிற்கு சற்று முன்பாக உள்ள ரேமன்ட்ஸ் துணி  கடை எதிரே யூடர்ன் செய்து ஸ்பென்சர்  சந்திப்பு நோக்கி செல்லலாம். போக்கு வரத்து மாற்றம் சோதனை முயற்சியாக  4ஆம் தேதி (சனிக்கிழமை) முதல்  நடைமுறைப்படுத்த உள்ளது.