கிருஷ்ணகிரி, டிச.13- கடந்த மாதம் பெய்த கடும் மழையின் காரணமாக தேன்கனிக் கோட்டை வட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கேழ்வரகு, நெற்பயிர்,காய்கறிகள். பசுமைக்குடில் மூலம் விவசாயம் செய்து ஏற்றுமதி செய்யப்படும் பணப் பயிர்களான உயர் ரக பூக்கள், காய்கறிகள் அனைத்தும் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 30 கோடிக்கும் மேல் ஆகும். குறிப்பாக இந்த வட்டத்தின் சிறப்பான (ராகி) கேழ்வரகு பயிரிட்டு இருந்த சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பாதிப்படைந்து மழையிலும், களத்திலும் அழகி முளைத்து வீணாகிப் போனது. இதுகுறித்து வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தும் பாதிக்கப்பட்ட விவசாயத்தை ஆய்வு செய்யாமலும், இழப்பீடு வழங்காமலும் இருந்ததால் பாதிப்படைந்த விவசாய பயிர்களை வயல்களை உடனடியாக ஆய்வு செய்து, அதனடிப் படையில் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தேன்கனிக் கோட்டை வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் பெருந்திறல் மனு கொடுக்கும் போராட்டமும் நடைபெற்றது.
போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். வட்டச் செய லாளர் அனுமப்பா முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.ஜி.சேகர் விளக்கிப் பேசினர். விவசாயிகள் சங்க வட்டச் நிர்வாகி கள் சிவராஜ், ராஜா, மார்க்சிஸ்ட் கட்சி தளி, கெலமங்கலம் ஒன்றியச் செய லாளர்கள் வெங்கடேஷ், சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் இருதயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.விவசாயிகள் சங்கம் சார்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கொடுத்த மனுவை வட்ட வருவாய் ஆய்வாளர் நேரில் வந்து பெற்றுக் கொண்டார். வட்டாட்சியர் குருநாதனிடம் நடத்திய பேச்சுவார்த்தை அடிப்படை யில் உடனடியாக மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் பயிர், விவசாய பாதிப்புகளை அளந்து மதிப்பீடு செய்யவும் அதனடிப்படையில் இழப்பீடு வழங்குவதற்கு நட வடிக்கை எடுப்பதாகவும், பல தலை முறைகளாக விவசாயம் செய்து வரும் பட்டா இல்லாத புறம்போக்கு நிலங்களில் விவசாயம் பாதித்த பகுதிகளையும் அளவீடு செய்யவும் இழப்பீடு குறித்த மதிப்பீடு செய்யவும் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்வதாகவும், அனுமந்தபுரம் சந்தனபள்ளி, இருதுக்கோட்டை உட்பட கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதித்த கிராமங்களில் தடுப்பூசி போடவும் மருத்துவ முகாம்கள் நடத்தவும் மருத்துவம் பார்க்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.