நியோ, இசட் மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள்
சென்னை,ஏப்.11- ஐக்யூஓஓ நிறுவனம் 4-ம் ஆண்டு நிறைவு விழாவை யொட்டி வரும் 14 ஆம் ந்தேதி வரை நியோ மற்றும் இசட் மாடல் ஸ்மார்ட்போன் களுக்கு ஏராளமான சலுகை கள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இவற்றை வாடிக்கை யாளர்கள் இதன் இணைய தளமான ஐக்யூஓஓ இ-ஸ்டோர் மற்றும் அமே சான்.இன் இணைய தளங்களில் வாங்கலாம். ஐக்யூஓஓ 11 ஸ்மார்ட் போனுக்கு ரூ.25 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப் ப்படுகிறது. மேலும் இதன் குறிப்பிட்ட மாடல்களான ஐக்யூஓஓ 12 டெசர்ட் ரெட், ஐக்யூஓஓ இசட்9, ஐக்யூஓஓ நியோ 9 புரோ மற்றும் ஐக்யூஓஓ இசட் 7 புரோ உள்ளிட்ட மாடல்களுக்கும் சலுகைகளை இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
நுணுக்கமான அணுகுமுறையில் அட்ரீனல் கட்டி அகற்றம்: சென்னை மருத்துவமனை சாதனை
சென்னை, ஏப்.11- சென்னையில் உள்ள ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்ட் யூரோலஜி (ஏஐஎன்யூ) மருத்துவமனை, தனது சென்னை மையத்தில் 34வயது ஆணுக்கு அட்ரீனல் கட்டியை அகற்றும் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. ஃபியோக்ரோ மோசைட்டோமா (Pheochromocytoma) என்று அழைக்கப் படும், மிகவும் அரிதான அட்ரீனல் கட்டி அந்த ஆணுக்கு வலது புறத்தில் இருப்பதை கண்டுபிடித்து அவருக்கு லாப்ரோஸ்கோபிக் முறையில் வலது அட்ரீனலெக்டமி என்ற சிக்கலான அறுவை சிகிச்சை செய்து அகற்றி உள்ளனர் . இந்த நோயாளிக்கு கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு, வயிற்று வலி, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல சிக்கல்கள் இருந்தன. மிகவும் கவனமாக ஆராய்ந்ததில் அவருக்கு வலது அட்ரீனலில் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த கட்டிகள் கேடேகோலோமின்ஸ் என்ற ஹார்மோன் களை மிக அதிக அளவில் உற்பத்தி செய்யும் , அதன் விளைவாக உயர் ரத்த அழுத்தம், அதிகமான இருதய துடிப்பு, படபடப்பு, வேயர்த்தல், தலைவலி மற்றும் அதிக ரத்த சர்க்கரை அளவு போன்றவை ஏற்படும். இந்த சிக்கல்கள் எல்லாம் இருந்ததால் அவருக்கு ஒரு நுணுக்கமான சிகிச்சை அளிப்பது அவசியமாக இருந்தது என்று மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், அனுபவம் மிகுந்த சிறுநீரக பராமரிப்பு மருத்துவ ஆலோசகருமான டாக்டர். வெங்கட்சுப்ரமணியம் கூறினார்.
கடலூரில் 250 டிரோன்கள் பங்கு பெறும் தேர்தல் திருவிழாவுக்கு ஏற்பாடு
கடலூர்,ஏப்.11- கடலூர் தேவனாம்பட்டினத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (ஏப்.14) 250 டிரோன்கள் பங்கு பெறும் தேர்தல் திருவிழா நடைபெற உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். மக்களவைத்தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்காக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் 250 டிரோன்கள் பங்குபெறும் பிரமாண்ட டிரோன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பிரபல பாடகர்கள் மானசி, அரவிந்த்கார்னீஸ்வரன் ஆகியோர் பங்குபெறும் இன்னிசை கலைநிகழ்ச்சி, கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் நடைபெற உள்ளது . இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு கலைநிகழ்ச்சியை கண்டுகளித்து மக்களவைத் தேர்தலில் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றுமாறு தேர்தல் அலுவலர் கேட்டுக்கொண்டார்.