சென்னை, ஏப்.26- கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கான நல திட்ட உதவிகள் உயர்த்தி வழங்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்தெரிவித்தார். சட்டப்பேரவையில் செவ்வாயன்று (ஏப்.26) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் ,"தொழில் நுட்பத்திலும் உலகளவிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது" என்றார். தரமான வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழிலாளர்களின் அனைத்து வகையான மேம்பாடு என்ற இரட்டை கொள்கையின் அடிப்படையில் முன்னேற்றத்துக்கான மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவரிசையில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பின்னர் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் அவர்களது குடும்பத்தின் வறிய நிலையை கருத்தில் கொண்டு வழங்கப்பட்டு வந்த நிவாரணத் தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கட்டுமான நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மகப்பேறு நலத்திட்ட உதவித் தொகையாக தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ. 6 ஆயிரம் ரூ. 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் ஆண்டுக்கு சுமார் 600 பதிவு பெற்ற பெண் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இதேபோல், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் தொழிலாளர்களுக்கும் இந்த உதவித்தொகையை உயர்த்தி வழங்கப்படும்.
கல்வி உதவித்தொகை உயர்வு
நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் படிப்புகளை வீட்டிலிருந்து சென்று படிப்பதற்கு ஆயிரம் ரூபாய் மற்றும் விடுதிகளில் தங்குவதற்கு 1,200 ரூபாய் என்று இருப்பதை இனி 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இந்த தொகை தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் உயர்த்தி வழங்கப்படும்.
திருமண நலத்திட்ட உதவித்தொகை உயர்வு
கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் திருமண நலத்திட்ட உதவித் தொகை ஆண்டுக்கு 3,000 பெண்களுக்கு 5000 என்பதில் இனி 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் இதன் மூலம் ஆண்டிற்கு சுமார் 3000 பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.
சேவை செயலி
தமிழ்நாட்டில் உள்ள 18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு பெற்ற அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ஜிபிஎஸ் வசதியுடன் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கிய சேவை செயலி ஒன்று உருவாக்கப்படும். இதனால் நலவாரியங்களில் பதிவு பெற்ற 37 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.
கோவையில் ஓய்வு இல்லம்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தங்குவதற்கு கட்டப்பட்ட திரு.வி.க ஓய்வில்லம் புதுப்பிக்கப்படும். மேலும், கோவை மாவட்டம் வால்பாறையில் 'சிங்காரவேலர் இல்லம்' என்னும் பெயரில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக கட்டடம் கட்டப்பபடும். தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் தங்குவதற்காக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஜீவா இல்லம் சுமார் ரூ. 1 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.
தொழிலாளர்களுக்கு முகாம்
பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் அடிக்கடி தீ மற்றும் விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுப்பதற்கு உற்பத்தியாளர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தற்போதைய சூழ்நிலையில் பாதுகாப்பான உற்பத்தி முறையை கையாள்வது தொடர்பாக நிபுணர்களைக் கொண்டு விழிப்புணர்வு முகாம் ஏற்படுத்தப்படும்.
தமிழில் பாட புத்தகம்!
தமிழ்நாட்டில் 91அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. ஆண்டுதோறும் சுமார் 25,000 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த மாணவர்கள் பயன்படுத்தும் பாடப்புத்தகங்கள் ஆங்கில மொழியில் உள்ளன. திறன் பயிற்சிகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மாணவர்கள் அனைவருக்கும் தமிழில் பாட புத்தகம் வழங்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் தொழிற்சாலைகளை துவங்க உள்ள நிலையில் உலகளாவிய வேலைவாய்ப்புகளை நமது மாணவர்கள் பெற வேண்டும். அவை தொழில்நுட்ப பயிற்சியோடு ஆங்கில மொழித்திறன் பயிற்சி வழங்குவது அவசியமாகிறது எனவே தொழிற்சாலைகளின் சூழலுக்கு ஏற்றவாறு பணிபுரியவும் தகவல்களை சீரிய முறையில் பரிமாறிக்கொள்ளவும் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு ஆங்கில மொழித்திறன் பயிற்சி கொடுக்கப்படும். தற்போதைய மாறி வரும் தொழிற்சாலைகளின் தொழில் நுட்பங்களுக்கு ஏற்றவாறு நவீன இயந்திரங்கள் கருவிகள் மற்றும் தளவாடங்கள் மூலம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு 57 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சீர்செய்ய முடியாத மற்றும் உபயோகமற்ற நிலையில் உள்ள எந்திரங்கள், கருவிகள் அனைத்தும் மாற்றப்படும் இதற்காக ரூ. 20 கோடி செலவிடப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.